×

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூரான் கால்வாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது: 20 ஏக்கர் கரும்பு தோட்டம் சேதம்

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தி.மழவராயனூர் கிராமம் உள்ளது. இக்கிராம மத்தின் வழியாக மலட்டாற்றிலிருந்து பிரிந்து ஏமப்பூரான் கால்வாய் செல்கிறது. கால்வாய் தண்ணீர் ஏமப்பூர் ஏரிக்கு செல்கிறது. தற்போது சாத்தனூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் மழை நீரும் சேர்ந்து தென்பெண்ணையாறு, மலட்டாறு, கோரையாறு, ராகவன் கால்வாய் உள்ளிட்ட அனைத்து நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.  

இந்நிலையில் நேற்று ஏமப்பூரான் கால்வாய் தி.மழவராயனூர் கிராம எல்லை பகுதியில் உடைந்து தண்ணீர் அதிகமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம், பெருமாள், சின்ராஜ்,  ஆறுமுகம், நடராஜன்  உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 20க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் உள்ள வெட்டும் தருவாயில் உள்ள கரும்புகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. விநாயகம் என்பவரின் நிலத்தில் மின் மோட்டாருக்கு அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் அடியோடு சாய்ந்தது.

இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராமம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. கால்வாய் உடைந்து விவசாய நிலங்கள் சேதம் அடைவதால் பொதுப்பணித்துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். மேலும் தண்ணீரை திருப்பிவிட அருகில் உள்ள சிறுமதுரை கிராம மக்களிடம் உதவி கோரியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Emapuran Canal ,Thiruvaniyallur , Thiruvennallur
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே இன்று...