×

பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் 8,462 தன்னார்வலர்கள், தீயணைப்பு மீட்பு குழுவினர்: அவசர உதவி தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், தீயணைப்பு மீட்பு குழுவினர் 8462 தயார் நிலையில் உள்ளனர். மேலும் அவசர உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு மீட்பு பணிகள் துறை வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை காலமாக இருப்பதால் பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் அனைத்து நிலையங்களும் உபகரணங்களுடன் முழு வீச்சில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது. மேலும், வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் சிக்கும் நபர்களை பாதுகாப்பாக மீட்க ரப்பர் படகுகள் மற்றும் மோட்டர் படகுகள், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற மின்விசை ரம்பங்கள், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரினை வெளியேற்ற நீர் இறைக்கும் பம்புகள், ஜெனரேட்டர், எமர்ஜென்சி லைட் மற்றும் கயிறுகள், லைப் பாய், லைப் ஜாக்கெட் உள்ளிட்ட அனைத்து செயற்கருவிகள் தயார் நிலையில் உள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் திறன்மிக்க தீயணைப்பு நீச்சல் வீரர்கள் மற்றும் கயிறு மூலம் மீட்பு பணி மேற்கொள்ள பயிற்சி பெற்ற வீரர்கள் என 2 கமாண்டோ படைகள் பேரிடரை எதிர்கொள்ள முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டவர்களை அடையாளம் காட்டும் கருவிகள் ரோப் லான்சர், ரோப் ரைடர் மற்றும் தெர்மல் இமேஜிங் கேமிரா ஆகியவை தயார் நிலையில் உள்ளது. வெள்ள காலங்களில் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு தகவல் தொடர்பு சாதனங்களான வாக்கி டாக்கி போன்றன தயார் நிலையில் உள்ளது.

தாழ்வான பகுதிகள், வெள்ளநீர் சூழும் குடியிருப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளக்காலங்களில் பிற அரசு துறையினருடன் ஒருங்கிணைந்து மீட்பு பணி மேற்கொள்ளப்படும். மேலும், வானிலை ஆய்வு மையத்தின் தகவல் பெற்று அன்றாட வானிலை நிலவரத்திற்குகேற்ப மீட்பு பணிக்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் தன்னார்வலர்களை கொண்ட தீயணைப்பு மீட்பு குழுவினர் 8462 நபர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு பேரிடர் காலங்கள் மற்றும் தீ விபத்து மற்றும் மீட்பு பணி அழைப்புகளில் பயன்படுத்தத்தக்க வகையில் தயார் நிலையில் உள்ளது. அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கட்டுப்பாட்டு அறை 101, 112, மற்றும் தீ செயலி, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறை - 1070, 9445869843, மருதம் கட்டுபாட்டு அறை - 044-24331074, 24343662 ஆகியவற்றை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.

Tags : 8,462 volunteers, fire and rescue teams prepare for monsoon: Emergency helpline numbers announced
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...