எங்கள் பேட்டிங் ஸ்டைல் இதுதான்: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி

துபாய்: உலக கோப்பை டி.20 தொடரில் துபாயில் நேற்று நடந்த 37வது போட்டியில் சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் இந்தியா-ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற விராட் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 17.4 ஓவரில் 85 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சில் ஜடேஜா, முகமது ஷமி தலா 3, பும்ரா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய இந்தியா 6.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 89 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. கே.எல்.ராகுல் 19 பந்தில், 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 50, ரோகித்சர்மா 16 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். கோஹ்லி 2, சூர்யகுமார் யாதவ் 6 ரன்னில் களத்தில் இருந்தனர். ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது: இது நாங்கள் மீண்டும் முயற்சித்த ஆதிக்கம் செலுத்தும் செயல்திறன். நாளை (ஆப்கன்-நியூசி.போட்டி) என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். இந்த போட்டி பற்றி நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் எப்படி விளையாடுவது என்பது தெரியும்.

இந்த மைதானத்தில் டாஸ் எவ்வளவு முக்கியமானதாக இருக்கும் என்பது தெரியும். எதிரணியை 100-120 ரன்னில் கட்டுப்படுத்துவது பற்றி பேசினோம். ஆனால் அதற்குள் கட்டுப்படுத்தினோம். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பின்னர் ராகுல்-ரோகித் பேட்டிங்கில் அசத்தினர். எங்கள் பேட்டிங் ஸ்டைல் இதுதான். நாங்கள் 8-10 ஓவருக்குள் வெற்றி பற்றி பேசினோம். உண்மையில் மிகவும் கடினமாக செல்ல விரும்பவில்லை, ஏனெனில் விக்கெட் இழந்தால், கூடுதல் 20 பந்து ஆடவேண்டி இருக்கும். இயல்பாக விளையாடினால் ரன் வேகமாக வரும் என்று நினைத்தோம். எங்கள் பயிற்சி ஆட்டங்களைப் பார்த்தால், நாங்கள் உண்மையில் இப்படித்தான் பேட்டிங் செய்து வருகிறோம் என்பது தெரியும். பிறந்தநாள் கொண்டாட்டம் பெரிதாக இல்லை. நான் இப்போது அந்த கட்டத்தை தாண்டிவிட்டேன். என் மனைவியும் மகளும் இங்கே இருக்கிறார்கள், அந்த கொண்டாட்டம் போதும், குடும்பம் இங்கு இருப்பது ஒரு வரம், என்றார். ஆட்டநாயகன் ஜடேஜா கூறுகையில், இந்த ஆடுகளத்தில் பந்துவீசுவதை ரசித்தேன். பந்து நன்றாக திரும்பியது. நாங்கள் ஒரு நல்ல பிராண்ட் கிரிக்கெட்டை விளையாடத் தேடினோம். இப்படி விளையாடினால் நம்மை யாராலும் வெல்ல முடியாது. டி20யில் இப்படித்தான் விளையாட வேண்டும், என்றார்.

Related Stories:

More