முத்துப்பேட்டை அருகே முயல்கள் வேட்டை : 5 பேர் கைது-வனத்துறையினர் அதிரடி

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அருகே முயல்களை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.முத்துப்பேட்டை அடுத்த தொண்டியகாடு முதல் அதிராம்பட்டினம் வரை வனத்துறை சார்பில் தஞ்சை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதிஸ் உத்தரவின்படி, திருவாரூர் மாவட்ட வன அலுவலர் அறிவொளி மேற்பார்வையில், முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் தாஹிர் அலி தலைமையில் வனக்காப்பாளர்கள் சகிலா, சிவநேசன், கணேசன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மரவக்காடு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 5பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்கோட்டை வேலாப்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பையன் மகன் முருகேசன்(24), கருப்பையா மகன் ஜெயசங்கர்(37), சின்னத்தம்பி மகன் விக்னேஷ்(27), முத்து மகன் அன்பு(31), கணேசன் மகன் நாகராஜ்(32) ஆகியோர் என்பதும் அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் முயல்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து 5பேர மீதும் இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன்படி வன உயிரினங்களை வேட்டையாடி துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு ரூ.15ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட முயல்கள், பிடிக்க பயன்படுத்திய வலை மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது போன்று செயலில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் அதனால் யாரேனும் இதுபோன்று செயலில் ஈடுபட்டால் முத்துப்பேட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் என வனச்சரக அலுவலர் தாஹிர் அலி கூறினார்.

Related Stories:

More