×

திருவாரூர் மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்-வேளாண்துறை இயக்குனர் ஆய்வு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை நேற்று வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழையாக பெய்து வருகிறது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 28ம்தேதி முதல் இந்த மாதம் 3ம் தேதி வரையில் ஒரு வார காலத்திற்கு கன மழை பெய்தது.


இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது. மேலும் திருவாரூர் அருகே உக்கடை என்ற இடத்தில் வெட்டாற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் குறுவை சாகுபடியானது ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 330 ஏக்கரில் நடைபெற்று 90 சதவீத பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 10 சதவீத பயிர்கள் மழையின் காரணமாக அறுவடை நடைபெறாமல் போனது. மேலும் சம்பா சாகுபடியானது 2 லட்சத்து 30 ஆயிரத்து 905 ஏக்கரிலும், தாளடி பயிர் 89 ஆயிரத்து 45 ஏக்கர் என மொத்தம் 3 லட்சத்து 19 ஆயிரத்து 950 ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த ஒருவார கால கனமழை காரணமாக மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி மாலை வரையில் வேளாண் துறை அலுவலர்களின் கணக்கெடுப்புப்படி திருவாரூர் ஒன்றியத்தில் 4 ஆயிரத்து 492 ஏக்கரிலும், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 3 ஆயிரத்து 665 ஏக்கரிலும், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஆயிரத்து 445 ஏக்கரிலும், மன்னார்குடி ஒன்றியத்தில் 5 ஆயிரத்து 627 ஏக்கரிலும், கோட்டூர் ஒன்றியத்தில் 8 ஆயிரத்து 15 ஏக்கரிலும், நன்னிலம் ஒன்றியத்தில் 9 ஆயிரத்து 955 ஏக்கரிலும், நீடாமங்கலம் ஒன்றியத்தில் 4 ஆயிரத்து 442 ஏக்கரிலும், குடவாசல் ஒன்றியத்தில் 4 ஆயிரத்து 875 ஏக்கரிலும், கொரடாச்சேரி ஒன்றியத்தில் 5 ஆயிரத்து 2 ஏக்கரிலும், வலங்கைமான் ஒன்றியத்தில் 4 ஆயிரத்து 357 ஏக்கரிலும் என மொத்தம் 51 ஆயிரத்து 875 ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னரும் இந்த பாதிப்பு என்பது சற்று கூடுதலாக இருந்து வரும் நிலையில் மாவட்டத்தில் சுமார் 52 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலாக சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழைநீரால் சூழப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை நேற்று மாவட்டத்தில் மழை நீரால் சூழப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி திருவாரூர் ஒன்றியத்திற்குடபட்ட கருப்பூர் மற்றும் வடகுடி பகுதியில் நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதால் வேர் அழுகும் தன்மை ஏற்பட்டுள்ளது என்றும், தண்ணீர் வடிந்தாலும் அறுவடை நேரத்தில் மகசூல் பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே அரசு சார்பில் நிவாரணம் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

அதற்கு பாதிப்புகள் குறித்து வேளாண் துறை அலுவலர்கள் கணக்கெடுத்து வருவதாகவும், இதன் விபரம் அரசுக்கு தெரியப்படுத்தபடும் என்றும் இயக்குனர் அண்ணாதுரை தெரிவித்தார். ஆய்வின்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Rainwater ,Thiruvarur District , Thiruvarur: Director of Agriculture Annathurai inspected the rain-affected paddy crops in Thiruvarur district yesterday.
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...