கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு எதிரொலி மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை: பாஜவினர் பங்கேற்பு

குன்றத்தூர்: கேதார்நாத் கோயிலில் நரேந்திர மோடி வழிபாடு எதிரொலியாக  மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பாஜவினர் பங்கேற்று சாமி தரிதனம் செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை 7.30 மணி அளவில் உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து, கேதார்நாத் கோயிலில் 400 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து, அவற்றிற்கான பணிகளையும் பார்வையிட்டார். கடந்த 2013ம் ஆண்டு ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் சேதமடைந்த ஆதி சங்கரர் சமாதியும் தற்போது இந்த நிதியில் புனரமைக்கப்பட்டது.

அதனையும் மோடி பார்வையிட்டார். இவை அனைத்தும் காணொளி காட்சி வாயிலாக இந்தியா முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆதி சங்கரர் மடங்கள் நிறுவிய புகழ்பெற்ற 16 கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, வரலாற்று சிறப்பு மிக்கதும், தொன்மையான, புகழ்பெற்ற கோயிலுமான மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாஜவினர் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் பாஜ மாநில செயலாளர் பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்எம்ஆர் ஜானகிராமன், மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் அய்யாதுரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

More