ஒரகடம் டாஸ்மாக் விற்பனையாளர் கொலை வழக்கில் பீகார் வாலிபர் கைது: மற்றொருவரை தீவிரமாக தேடும் போலீஸ்

ஸ்ரீபெரும்புதூர்: ஒரகடம் டாஸ்மாக் விற்பனையாளர் கொலையில் பீகார் வாலிபர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மற்றொருவரை  தீவிரமாக போலீஸ் தேடி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த வாரணவாசி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துளசிதாஸ் (42). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில்,  கடந்த மாதம் 4ம் தேதி இரவு டாஸ்மாக் கடை விற்பனை முடிந்து, மற்றொரு விற்பனையாளர் கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்த ராமு (35) ஆகிய இருவரும் டாஸ்மாக்கில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றனர். அப்போது, பைக்கில் வந்த 2 பேர் கத்தியால், துளசிதாசை சரமாரியாக குத்தினர். இதனை தடுக்க முயன்ற ராமுவையும் சரமாரியாக குத்தியுள்ளனர்.

இதில் துளசிதாஸ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராமுவை அப்பகுதி மக்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டது. மேலும், அவரது மார்பு பகுதியில் இரும்பு துகள் சிக்கி இருந்தது. இதனை அகற்ற ஆப்ரேஷன் செய்ய மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார்.

இதனை தொடர்ந்து,  கடந்த மாதம் ராமுவிற்கு அறுவை சிகிச்சை செய்து மார்பு பகுதியில் சிக்கி இருந்த இரும்பு துகளை அகற்றி வெளியே எடுத்து பார்த்தனர். அதில், அந்த இரும்பு துகள் துப்பாக்கி தோட்டா என்று தெரிய வந்தது.  

இதனையடுத்து போலீசார் ஒரகடம் பகுதியில் பொருத்தபட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை சேகரித்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில்,  கொளையாளிகள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. உடனே,  தனிப்படை போலீசார் பீகார் விரைந்து சென்றனர். மேலும், பீகார் மாநில போலீசார் உதவியுடன் பீகார் மாநிலம், கைமூர் மாவட்டம், ஹவ்காரா கிராமத்தில் பதுங்கி இருந்த உமேஷ்குமார் (25) போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவனை நேற்று ஒரகடம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மற்றொரு வாலிபரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: