×

52 ரன் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

ஷார்ஜா: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் (2வது பிரிவு), நியூசிலாந்து அணி 52 ரன் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது. ஷார்ஜாவில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நமீபியா கேப்டன் எராஸ்மஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். மார்டின் கப்தில், டேரில் மிட்செல் இருவரும் நியூசிலாந்து இன்னிங்சை தொடங்கினர். கப்தில் 18 ரன், மிட்செல் 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் கேன் வில்லியம்சன் 28 ரன் (25 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து எராஸ்மஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

அவரைத் தொடர்ந்து கான்வே 17 ரன் எடுத்து ரன் அவுட்டாக, நியூசிலாந்து 14 ஓவரில் 87 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், கிளென் பிலிப்ஸ் - ஜேம்ஸ் நீஷம் இணைந்து அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன் குவித்தது. பிலிப்ஸ் 39 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), நீஷம் 35 ரன்னுடன் (23 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நமீபியா பந்துவீச்சில் பெர்னார்ட், டேவிட் வீஸ், எராஸ்மஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 20 ஓவரில் 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களமிறங்கியது. தொடக்க வீரர்கள் வான் லிங்கன் 25, ஸ்டீபன் பார்ட் 21 ரன்னில் வெளியேற, கேப்டன் எராஸ்மஸ் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வீரர்களில் ஸேன் கிரீன் 23, டேவிட் வீஸ் 16 ரன் எடுக்க, நிகோல் லாப்டி ஈட்டன், கிரெய்க் வில்லியம்ஸ் இருவரும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து 52 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஸ்மிட் 9, ரூபன் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் சவுத்தீ, போல்ட் தலா 2, சான்ட்னர், நீஷம், சோதி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 35 ரன் விளாசியதுடன், ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய நீஷம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 4 போட்டியில் 3வது வெற்றியை வசப்படுத்திய நியூசிலாந்து 6 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியதுடன் அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்தது.      


Tags : New Zealand ,Namibia , New Zealand beat Namibia by 52 runs
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்