×

கே.எல்.ராகுல் அதிரடி அரை சதம் இந்தியா அபார வெற்றி

துபாய்: ஸ்காட்லாந்து அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் (2வது பிரிவு), இந்தியஅணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. துபாயில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஸ்காட்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர். இதனால் அந்த அணி 17.4 ஓவரில் 85 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சி அதிகபட்சமாக 24 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். மைக்கேல் லீஸ்க் 21 ரன் (12 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), மெக்லியாட் 16 ரன, மார்க் வாட் 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர் (3 பேர் டக் அவுட்). பிராட் வீல் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் ஷமி, ஜடேஜா தலா 3, புரா 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 86 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரன்ரேட்டில் நியூசிலாந்து அணியை முந்துவதற்கு, இந்த இலக்கை 8.5 ஓவர்களிலும், ஆப்கானிஸ்தான் அணியை முந்துவதற்கு 7.1 ஓவரிலும் இந்தியா எட்ட வேண்டும் என்பதால், ராகுல் - ரோகித் இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியில் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்து மிரட்டியது. ரோகித் 30 ரன் (16 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ராகுல் 50 ரன் (19 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெல்விலியன் திரும்பினர். இந்தியா 6.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன் எடுத்து அபாரமாக வென்றதுடன், ரன் ரேட்டில் நியூசி., ஆப்கன். அணிகளை பின்னுக்குத் தள்ளியது. ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Tags : KL Rahul ,Half Century India , KL Rahul Action Half Century India won by a huge margin
× RELATED டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி