திருவண்ணாமலையை சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை அண்ணாமலையார் தீபத்திருவிழா நாட்களில் தரிசனத்துக்கு இ-பாஸ்: இன்று முதல் முன்பதிவு செய்யலாம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய இன்று முதல் இ-பாஸ் பெற முன்பதிவு செய்யலாம். மேலும் திருவண்ணாமலையை சேர்ந்தவர்களுக்கு 4 இடங்களில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரம் பேர், வெளி மாவட்ட, மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் உள்பட தினமும் 13 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும், வெளி மாவட்டம் மற்றும் மாநில பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவு செய்து கட்டணமின்றி இ-பாஸ் பெறலாம். நாளை முதல் 17ம் தேதி மதியம் 1 மணி வரையும், 21ம் தேதி முதல் 23ம் தேதி வரையும் இ-பாஸ் இருந்தால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி உண்டு. 10ம் தேதி மற்றும் 16ம் தேதிகளில் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்படும். 17ம் தேதி மதியம் 1 மணி முதல் 20ம் தேதி வரை கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லை. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இ-பாஸ் பெற தேவையில்லை. அதற்கு மாற்றாக, நாளை மற்றும் நாளை மறுதினம் நேரில் அனுமதி அட்டை பெறலாம். என்று கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். கிரிவலம் செல்ல தடை வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை கிரிவலம் செல்லவும் அனுமதியில்லை.

Related Stories:

More