300 ஏக்கரில் 49 படுக்கை அறையுடன் பிரமாண்ட வீடு முகேஷ் அம்பானி குடும்பம் லண்டனில் குடியேற முடிவு? ரூ.592 கோடிக்கு வாங்கியதாக தகவல்

புதுடெல்லி: ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் 300 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட வீட்டுக்கு அடுத்தாண்டு குடி பெயர்வதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர். இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.7 லட்சம் கோடி. தற்போது இவர், மும்பையில் அல்மவுன்ட் சாலையில்  அமைந்துள்ள 27 மாடிகள் கொண்ட ‘அன்டிலியா’ இல்லத்தில் வசித்து வருகிறார். மிகப்பெரிய செலவில் கட்டப்பட்டுள்ள இதில், இல்லாத வசதிகளே கிடையாது.

ஆனால், இந்த வீட்டில் வசிப்பதில் முகேஷ் அம்பானிக்கும், அவருடைய மனைவி நீட்டா அம்பானிக்கும் சலிப்பு ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது. இதனால், தங்களுக்கு என்று 2வது பெரிய வீடு ஒன்று வேண்டும் என்று அவர்கள் விரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, புதிய வீடு வாங்குவதற்கான தேடலை அவர்கள் தொடங்கியதில், இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள பக்கிங்கம்ஷைர் மாகாணத்தில் உள்ள ஸ்டோக் பார்க் என்ற இடத்தில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தையும், அதில் 49 படுக்கை அறைகளுடன் கொண்ட வீட்டையும் ரூ.592 கொடிக்கு வாங்கி இருப்பதாக, ‘மிட் டே’ என்ற ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வீட்டில் அன்டிலியா இல்லத்தில் இருப்பதை விட மிகப்பெரிய பூஜை அறை, திறந்தவெளியி்ல் பிரமாண்ட கோயில், நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை போன்றவைகள் அமைக்கப்படுவதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்தாண்டு தீபாவளியை இந்த வீட்டில்தான் அம்பானி குடும்பத்தினர் கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது. விரைவில் மும்பை திரும்ப உள்ள அவர்கள், லண்டன் வீட்டில் அனைத்து பணிகளும் முடிந்த பிறகு அடுத்தாண்டு அங்கு குடியேற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

* ரிலையன்ஸ் மறுப்பு

ரிலையன்ஸ் நிறுவனம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரிலையன்ஸ் நிறுவன தலைவரும், அவருடைய குடும்பமும் லண்டனில் குடியேறப் போவதாக வெளியாகி உள்ள தகவல் அடிப்படை இல்லாதது. யூகத்தின் அடிப்படையிலானது. லண்டன் மட்டுமின்றி உலகத்தின் எந்த பகுதியிலும் அவர்கள் குடியேற மாட்டார்கள். லண்டனில் வாங்கப்பட்டுள்ள ‘ஸ்டோக் பார்க்’ எஸ்டேட், கோல்ப் மற்றும் விளையாட்டு பொழுதுப்போக்கு பூங்காவுக்காக வாங்கப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More