கனமழையால் தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி உட்பட 6 பேர் பரிதாப பலி: ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு

சேலம்: கனமழையால் தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. களக்காடு அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கர்ப்பிணி பலியானார். மேலும் 5 பேர் வெள்ளத்தில் சிக்கியில் இறந்தனர். ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், குப்பனூரில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை முழுக்க பாறைகள், சிறிய கற்கள் விழுந்து சேதமடைந்தது.

மேலும் கொட்டச்சேடு அருகேயுள்ள தரைப்பாலத்தில் வெள்ளம் முழங்கால் அளவுக்கு பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஏற்காட்டில் இருந்து குப்பனூருக்கு வந்த வாகனங்கள், குப்பனூரில் இருந்து ஏற்காட்டிற்கு வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்காட்டில் இருந்து கீழே வரமுடியாமல் சுற்றுலாப்பயணிகள் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சென்று, மலைப்பாதையில் மாட்டிக்கொண்ட சுற்றுலா பயணிகளை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். மண் சரிவால் குப்பனூர்- ஏற்காடு சாலையில் 2வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மண்சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திம்பம் மலைப்பாதை: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில்  27 வது கொண்டை ஊசி வளைவு அருகே 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதோடு மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.  திருப்பூரில் கனமழை காரணமாக 100க்கும் அதிகமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுவர் இடிந்து 2 பேர் பலி: தொடர் மழை காரணமாக கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் புதுகாலனியில் சங்கர் (45), விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நல்லம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (53) ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இறந்தனர்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கர்ப்பிணி: நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நாங்குநேரியான் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தால் சிதம்பரபுரம் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனிடையே  சிதம்பரபுரம் ராஜபுதூர் தெருவைச் சேர்ந்த முருகன் தனது மகள் லேகா (23), அவரது கணவர் குமரி மாவட்டம் நாகர்கோவில் சூரங்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பரமேஸ்வரன் ஆகியோரை தலை தீபாவளி கொண்டாட ஊருக்கு ஆட்டோவில்  அழைத்து வந்தார். பாலத்தின் மீது வெள்ளம் சென்றதால் ஆட்டோ செல்ல முடியாத நிலை நிலவியது. அப்போது மின்சாரமும் தடைபட்டிருந்தது.

இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வெள்ளத்தின் வேகம் தெரியாமல் முருகன், லேகா, பரமேஸ்வரன், முருகன் மகன் பாரத் ஆகியோர் தண்ணீருக்குள் இறங்கி நடந்து சென்று பாலத்தை கடக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக திடீர் என வெள்ளம் நால்வரையும் இழுத்துச் சென்றது. முருகன், பாரத், பரமேஸ்வரன் ஆகியோர் வெள்ளத்தில் நீந்தி கரை சேர்ந்தனர். லேகா வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். ஒரு மரத்தில் சிக்கியிருந்த லேகாவின் சடலம் மீட்கப்பட்டது. லேகாவிற்கும், பரமேஸ்வரனுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. தற்போது லேகா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

4 மாணவர்கள் பலி: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் எல்.கே.சி. நகரைச் சேர்ந்தவர் தரணீஸ் (19). தாராபுரத்தில் உள்ள அரசு ஐடிஐயில் படித்து வந்தார். இவரும் உடன் ஐடிஐயில் படித்த  நண்பர்களான சுரேந்தர், வெங்கடேஷ், ஆபிரகாம் ஆகியோரும் நேற்று முன்தினம் வெள்ளக்கோவில் அடுத்துள்ள புதுப்பை, அணைக்கட்டு என்ற பகுதியில் செல்லும் அமராவதி ஆற்றில் குளித்தபோது 4 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில்  குளித்தபோது கட்டிட தொழிலாளி ராமச்சந்திரனை வெள்ளம் இழுத்துச் சென்றது. அவரது உடலை போலீசார் மீட்டனர்.

மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி: சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டியில் நேற்று மாலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஜெயக்கொடி(46) மற்றும் அலமேலு(52) ஆகியோர் மின்னல் தாக்கி பலியாகினர்.

* வராக நதியில் தவறி விழுந்த சென்னை வாலிபர்

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, மேல்மங்கலத்தில் உள்ள அக்ரஹாரத்தில் தனியார் வேதபாடசாலை உள்ளது. கடந்த 2006ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 47 மாணவர்கள் தங்கி வேதம் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை வேடிக்கை பார்ப்பதற்காக நேற்று மதியம் வேதபாடசாலை மாணவர்கள் மதுரையைச் சேர்ந்த சுந்தரநாராயணன் (19), சென்னையைச் சேர்ந்த மணிகண்டன் (21) மற்றும் அஸ்வின், ஐயப்பன், தர்மமுனீஸ்வரன் ஆகியோர் சென்றனர். அப்போது சுந்தரநாராயணன், மணிகண்டன் ஆகியோர் தவறி விழுந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்றது. அவர்களை தேடும் பணி நடக்கிறது.

* காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 50 சுற்றுலா பயணிகள் மீட்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பநத்தம் அணை அருகே நாமக்கல் ஓடை நீர்வீழ்ச்சி உள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் காலை ஏராளமான சுற்றுலா பயணிகள் நாமக்கல் ஓடை நீர்வீழ்ச்சியை பார்க்க வந்தனர். திடீரென காட்டாற்று வெள்ளம் வந்தது. இதில் சிக்கிய 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற முடியாமல் பரிதவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த செங்கம் தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

Related Stories:

More