×

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றினார் மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உதவியாளர் உட்பட 30 பேர் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உதவியாளர் உட்பட 30 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேலை வாங்கித் தருவதாக கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் விசாரணை நடத்தி 58 வழக்குகள் பதியப்பட்டு, 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 12 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இவர்கள் அரசு வேலை, வங்கி வேலை, ரயில்வே வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளரான தஞ்சாவூரைச் சேர்ந்த சேஷாத்திரி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி ராணி எலிசபெத் (36) மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் தனக்கு செல்வாக்கு இருப்பதாக கூறி கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய ஹரிநாத், தலைமை செயலக ஊழியர் கண்ணன் என்பவரும் அடங்குவர். இந்த 30 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இவர்கள் மீது இன்னும் பல புகார்கள் உள்ளன.

மேலும் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு இவர்களிடம் இனியும் மக்கள் ஏமாறக் கூடாது. இதுபோன்ற ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டவர்கள் பற்றி தகவலை தெரிந்து கொள்ள காவல்துறை தலைமையிட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 044-28447701, 28447703 மற்றும் வாட்ஸ் அப் நம்பர் 94981 05411, மாநில காவல் கட்டுப்பாட்டு அறை  எண் 044-23452359, சென்னை காவல் பொதுமக்கள் குறைதீர்ப்பு பிரிவு எண் 044-23452380 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

Tags : OS Maniyan , Police arrest 30, including aide to former minister OS Maniyan
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்