தமிழகத்தில் கொரோனா தொற்று பயம் நீங்கியதால் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்: ஜவுளி, பட்டாசு வியாபாரிகளும் மகிழ்ச்சி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பற்றிய பயம் நீங்கியதால், காலை முதல் இரவு வரை பட்டாசு வெடித்து தீபாவளியை பொதுமக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடினார். ஜவுளி மற்றும் பட்டாசு விற்பனை சிறப்பாக இருந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, தமிழகத்தில் தீபாவளியை பொதுமக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடினர். காலையில் எழுந்து குளித்து புத்தாண்டை அணிந்து, பல வகையான பலகாரங்களை சாமிக்கு படைத்து வழிபட்டனர். அதிகாலையில் இருந்தே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் அதிகளவில் இருந்ததால் தீபாவளி பண்டிகையை பொதுமக்களால் சிறப்பாக கொண்டாட முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் மிகவும் குறைந்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கும் கொரோனா பற்றிய பயம் நீங்கியுள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக தீபாவளி ஷாப்பிங் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நகர் பகுதிகளில் மிக சிறப்பாக நடந்தது. தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மதியம் வரை சென்னையில் லேசான மழை சாரல் இருந்தது. ஆனாலும், பட்டாசு பிரியர்கள் தெருக்களில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

இரவு நேரத்தில் வெடிக்கும் வாணவேடிக்கை, புஸ்வானம், மத்தாப்பு உள்ளிட்ட வெடிகளை அனைத்து வீடுகளிலும் போட்டிப்போட்டு வெடித்தனர். அனைவரும் மொட்டை மாடிக்கு சென்று இரவு நேர ராக்கெட் வெடிகளை வெடித்து மகிழ்ந்தனர். இதனால் இரவு 6 மணிக்கு மேல் சென்னையில் திரும்பிய திசையெல்லாம் வானத்தை வண்ண ஜாலங்களுடன் மின்ன வைத்தது. பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பிறகும் வெடி சத்தம் கேட்டது. மேலும், தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனாலும், பொதுமக்கள் அனுமதித்த நேரத்திற்கும் கூடுதலான நேரம் வெடித்து மகிழ்ந்தனர். சரவெடி வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால், கடந்த கால தீபாவளி போல் இல்லாமல், குறைவான அளவு சரவெடிகள் மட்டுமே இந்த தீபாவளிக்கு வெடிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததாலும், தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளி அன்றும் மழை இல்லாததால் பட்டாசு விற்பனை அமோகமாக இருந்தது. சென்னையில் மட்டும் சுமார் ரூ.500 கோடிக்கு மேல் பட்டாசு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் 15 முதல் 20 சதவீத பட்டாசுகள் விற்பனையாகவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் டியுசிஎஸ் நிறுவனம் மூலம் 12 கடைகளில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டது. இந்த கடைகளில் மட்டும் சுமார் ரூ.1 கோடியே 60 லட்சம் அளவுக்கு பட்டாசு விற்பனையாகி உள்ளது. அதேபோன்று, ஜவுளி விற்பனையும் கடந்த ஆண்டைவிட பல மடங்கு விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பட்டாசு வியாபாரிகள் கூறும்போது, ‘கொரோனாவில் இருந்த மீண்டு பொதுமக்கள் அதிகளவில் பட்டாசுகளை வாங்கி வெடித்தனர். சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளனர். இவர்களின் வேலைவாய்ப்பை இதுபோன்ற தடைகள் மூலம் பறிக்க கூடாது” என்றனர்.

* சிறப்போ சிறப்பு...

தீபாவளி கொண்டாட்டம் குறித்து, சென்னை மக்கள்  கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொரோனாவால் சிறப்பாக கொண்டாட முடியவில்லை. காரணம், பல நிறுவனங்களில் வேலை இல்லாமல் சம்பளம், போனஸ்  உள்ளிட்டவைகள் கிடைக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்ததால்  தீபாவளியை மிகவும் சிறப்பாக, உற்சாகமாக கொண்டாடினோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்தும் இனிப்புகள் சாப்பிட்டும் சிறப்பாக கொண்டாடினோம்” என்றனர்.

Related Stories: