தீபாவளி முடிந்த மறுநாளே தங்கம் விலை கிடுகிடு உயர்வு: சவரனுக்கு ரூ.464 அதிகரிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகை சமயத்தில் நகை வாங்குவதை பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டிருப்பர். இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வந்தது. இதனால், நகை வாங்குவோர் கடும் அதிச்சியடைந்தனர்.தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ரூ.22 குறைந்து ஒரு கிராம் ரூ.4,447க்கும், சவரனுக்கு ரூ.176 குறைந்து ஒரு சவரன் ரூ.35,576க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரன் ரூ.448 குறைந்தது. தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி அன்றும் தங்கம் விலை குறைந்தது தீபாவளி சமயத்தில் நகை வாங்குவோருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த மகிழ்ச்சி தீபாவளி முடிந்த மறுநாளே (நேற்று) தவிடு பொடியானது என்று தான் சொல்ல வேண்டும்.அதாவது, நேற்று காலை மீண்டும் தங்கம் விலை உயர்வை சந்தித்தது. நேற்று காலை மட்டும் கிராமுக்கு ரூ.53 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,500க்கும், சவரனுக்கு ரூ.424 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,000க்கும் விற்கப்பட்டது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் தங்கம் நேற்று மாலை மேலும் அதிகரித்தது. அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.58 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,505க்கும், சவரனுக்கு ரூ.464 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,040க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை சவரன் மீண்டும் ரூ.36,000ஐ தாண்டியுள்ளது. இது நகை வாங்குவோருக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: