×

புளியந்தோப்பு பகுதியில் கால்வாயில் குப்பையை அகற்றிய கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி பலி: மகன்கள் கண்முன் பரிதாபம்

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் கால்வாயில் தேங்கிய குப்பையை அகற்றிய கூலித்தொழிலாளி, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மகன்கள் கண்முன் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. புளியந்தோப்பு, கன்னிகாபுரம், வாசுகி நகர், 2வது தெருவை சேர்ந்தவர் முத்து (50), கூலி தொழிலாளி. இவரது மனைவி பச்சையம்மாள் (47). இவர்களுக்கு பாலாஜி, சரவணன், சரண்ராஜ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் இவர்களது வீட்டின் அருகே உள்ள வாசுகி நகர் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் குப்பை கழிவு தேங்கியதால், தண்ணீர் செல்வதற்கு தடையாக இருந்தது.

இதனால், கால்வாய் அடைப்பை சரிசெய்ய முத்து, தனது மகன்கள் பாலாஜி, சரவணன் ஆகியோருடன் கால்வாயில் இறங்கினர். அப்போது, எதிர்பாராதவிதமாக முத்து தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலாஜி, சரவணன் ஆகியோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தந்தையை தேடினர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே இதுகுறித்து புளியந்தோப்பு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வடசென்னை தீயணைப்புத் துறை அலுவலர் ராஜேஷ் கண்ணா, உதவி மாவட்ட அலுவலர்கள் முருகன், ஜெய்சங்கர் மற்றும் வியாசர்பாடி தீயணைப்பு நிலைய அதிகாரி பால்நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கால்வாயில் இறங்கி முத்துவை தேடினர்.

நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் தீபாவளி என்பதால் பட்டாசு வெடித்ததில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் கால்வாயில் மூழ்கி மாயமான முத்துவை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடுதல் பணியை கைவிட்டு தீயணைப்பு துறையினர் திரும்பி சென்றனர். இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் முத்துவின் உடல் கன்னிகாபுரம் வஉசி நகர் அருகேயுள்ள கால்வாயில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Puliyanthoppu , Mercenary drowns after clearing garbage in Puliyanthoppu area: Sons mourn
× RELATED புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில்...