×

நீட் தேர்வில் 202 மதிப்பெண்: ‘எங்கள் கிராமத்தில் இருந்து மருத்துவ படிப்பிற்கு செல்லும் முதல்ஆள் நான்’: கோவை பழங்குடியின மாணவி பெருமிதம்

கோவை: எங்கள் கிராமத்தில் இருந்து மருத்துவ படிப்பிற்கும் செல்லும் முதல்ஆள் நான்தான் என நீட் தேர்வில் 202 மதிப்பெண்கள் பெற்ற கோவை பழங்குடியின மாணவி கூறினார். கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பனூர் பழங்குடியினர் கிராமத்தில் மலசர் பழங்குடியின மாணவி சங்கவி. இவர் பிச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2018ல் பிளஸ் 2 படித்தார். சிறு வயதில் இருந்து மருத்துவராக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்து வந்தார். அவருக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால், நீட் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க முயன்றார். அங்கும் சாதிச்சான்றிதழ் இல்லாத காரணத்தினால் கல்லூரியில் படிக்க முடியாமல் போனது.

இதற்கிடையில், மாணவியின் தந்தை முனியப்பன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரின் தாய் வசந்தாமணி கண் பார்வை குறைபாடு உள்ளவர். இச்சூழ்நிலையில், மாணவி போராடி சாதிச்சான்றிதழ் பெற்று கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால், அதில் குறைவான மதிப்பெண் பெற்றார். இதையடுத்து, தன்னார்வ அமைப்பின் உதவியுடன் தற்போது நடந்த நீட் தேர்வினை எழுதி அதில் 202 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் நஞ்சப்பனூர் பழங்குடியினர் கிராமத்தில் மருத்துவ படிப்பிற்கு செல்லும் முதல் மாணவியாக சங்கவி தேர்வாகியுள்ளார்.

இது குறித்து மாணவி சங்கவி கூறியதாவது: சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட பிரச்னையால் பல்வேறு போராட்டங்களுக்கு பின் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினேன். இதில் 100க்கு கீழ் மதிப்பெண் கிடைத்தது. பின்னர், விடா முயற்சியாக தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் தனியார் கோச்சிங் கிளாசில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். இந்நிலையில், தற்போது நடந்த நீட் தேர்வில் 202 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

எங்களின் கிராமத்தில் இருந்து முதல் ஆளாக நான் மருத்துவ படிப்பிற்கு செல்லவுள்ளேன். மருத்துவ துறையை நான் தேர்வு செய்ததற்கு காரணம் என்னை பார்த்து எனது சமூக மக்களும் படித்து முன்னேற வேண்டும் என்பதற்குதான். என்னை பார்த்து தற்போது பலர் படித்து வருகின்றனர். நீட் தேர்வுக்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும். சிறந்த மருத்துவராகி அனைவருக்கும் சேவை செய்ய விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Gowai , NEET EXAMINATION, COUNTY, STANDARD STUDENT, Proud
× RELATED விபத்தில் மாணவர்கள் 6 பேர் படுகாயம்