×

உரப் பற்றாக்குறையால் தவித்த இலங்கைக்கு ‘நானோ’ உரம் சப்ளை: 2 விமானங்களில் சென்றது

கொழும்பு: உரப் பற்றாக்குறையால் தவித்த இலங்கைக்கு ‘நானோ’ உரத்தை 2 விமானங்களில் இந்திய அரசு அனுப்பி வைத்ததாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனமான இஃப்கோ, களச்  சோதனைகளுக்காக நானோ தொழில்நுட்பம் சார்ந்த உரங்களை குஜராத் மாநிலம் கலோல்  ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டை  50 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றும்,  பயிர் உற்பத்தியை  அதிகரிக்கும்  என்றும் இஃப்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் இலங்கை அதிபர்  கோத்தபய ராஜபக்சே, ரசாயன உர இறக்குமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த  உத்தரவால் இலங்கையில் கடுமையான உரப் பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் ‘நானோ’ உரத்தை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக 100 டன் நானோ நைட்ரஜன் திரவ உரங்களை இந்தியாவிடம் இருந்து இலங்கை அரசு கொள்முதல் செய்துள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்த இரண்டு விமானங்கள் மூலம் இலங்கையின் அவசர தேவைக்காக 100 டன் நானோ நைட்ரஜன் திரவ உரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘தீபாவளி திருநாளில், இந்திய விமானப்படை மீண்டும் இலங்கைக்கு நம்பிக்கை ஒளியைக் கொண்டு வந்தது. இரண்டு விமானங்களில் 100 டன் நானோ உரங்களை இலங்கை வந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sri Lanka , Fertilizer shortage, Sri Lanka
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...