×

மனைவியுடன் வனத்திற்குள் சுற்றியபோது யானை தாக்கி போலீஸ் எஸ்பி காயம்: சட்டீஸ்கரில் பரபரப்பு

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் மனைவியுடன் வனத்திற்குள் சுற்றிய போலீஸ் எஸ்பியை யானை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.  சட்டீஸ்கர் மாநிலம் கவுரேலா பேந்திர மார்வாஹி (ஜிபிஎம்) மாவட்ட போலீஸ் எஸ்பி திரிலோக் பன்சால் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா பன்சால் ஆகியோர் அமரு என்று வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு 14 யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்தன. வனத்துறை அதிகாரிகள், போலீஸ் எஸ்பியை வனத்திற்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும், தம்பதியினர் தங்களது ஊழியர்கள் மற்றும் சில உள்ளூர் கிராமவாசிகளுடன் காட்டுக்குள் நுழைந்தனர்.

இவர்கள் சென்ற பாதையில் யானைகள் கூட்டமாக சாலையை கடந்தன. அப்போது எஸ்பி திரிலோக் பன்சால், யானைக்கு அருகில் சென்றுள்ளார். அவரை யானை ஒன்று தூக்கி வீசியது. அதிர்ச்சியடைந்த அவர், காயத்துடன் அங்கிருந்து தப்பினார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாஜக-வைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் தரம்லால் கவுசிக் கூறுகையில், ‘யானைகளுக்கு அருகில் எவரும் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டும், போலீஸ் எஸ்பி சென்றுள்ளார். அதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் பூபேஸ் பாகேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்மாதிரியாக இருக்க வேண்டிய அதிகாரிகள், அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர்’ என்றார்.


Tags : SP ,Chhattisgarh , Raipur, Elephant, Police SP, Injury
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...