மாமல்லபுரத்தில் பொது பயன்பாட்டிற்காக தமிழக அரசு கையகப்படுத்திய நிலம் அரசாங்கத்துக்கே சொந்தம்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: மாமல்லபுரத்தில் பொது பயன்பாட்டிற்காக 47 ஆண்டுகளுக்கு முன் 5.29 ஹெக்டேர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழக அரசு கடந்த 1974ம் ஆண்டு பொது பயன்பாட்டிற்காக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 5.29 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தியது. பின்னர் அந்த நிலத்தில் 250 கோடி ரூபாய் செலவில் உலக தரம் வாய்ந்த அளவில் கடலுக்கு அடியில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாகியும் திட்டம் செயல்படுத்தப்படாததால் நிலம் கையகப்படுத்தி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் நிலத்தை திருப்பி தர உத்தரவிடக்கோரியும்  நில உரிமையாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, நிலத்திற்கான இழப்பீட்டு தொகை வழங்கிவிட்டதாலும், நிலத்தை அரசு எடுத்துக்கொண்டதாலும் அதில் தலையிட முடியாது என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லுபடியாகும் என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கிட்டத்தட்ட 47 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த பிரச்னை நீதிபதியின் தீர்ப்பின் மூலம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

Related Stories:

More