×

நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதி வாய்ப்பை இழந்தது: எங்கள் அணியின் `ரத்தினம்’ ஹசரங்கா: இலங்கை கேப்டன் ஷனகா பாராட்டு

அபுதாபி: 7வது உலக கோப்பை டி.20 கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 35வது போட்டியில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெ.இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சரித் அசலங்கா 41 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 68 ரன், நிசாங்கா 41 பந்தில் 5 பவுண்டரியுடன் 51 ரன், குசால்பெரேரா 29 ரன், கேப்டன் தசுன்ஷனகா 25 ரன் எடுத்தனர். வெ.இண்டீஸ் பந்துவீச்சில் ரஸ்செல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 190 ரன் இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ், 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களே எடுத்தது. இதனால் 20 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. ஹெட்மயர்  நாட்அவுட்டாக 54 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 81, நிகோலஸ்பூரன் 46 (34பந்து) ரன் எடுத்தனர். கெய்ல் 1, லீவிஸ் 8, சேஸ் 9, ரஸ்சல் 2,  பொல்லார்ட் 0, ஹோல்டர் 8, பிராவோ 2 என ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். இலங்கை பந்துவீச்சில் ஹசரங்கா, சாமிக்கா கருணாரத்னே, பெர்னாண்டோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர். சரித் அசலென்கா ஆட்டநாயகன் விருதுபெற்றார். 4வது போட்டியில் 3வது தோல்வியை சந்தித்த நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இலங்கை 5 போட்டியில் 2வது வெற்றிபெற்று ஆறுதலுடன் வெளியேறியது.

 வெற்றிக்கு பின்இலங்கை கேப்டன் ஷனகா கூறுகையில், ஒரு நல்ல வெற்றி. இளைஞர்கள் கடினமாக உழைக்கிறார்கள், அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தொடர் முழுவதும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதோடு பந்துவீச்சிலும் சிறப்பாக இருந்தது. அசலங்கா, நிசாங்காவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. தற்போது அணி சரியான பாதையில் செல்கிறது என நினைக்கிறேன். ரசிகர்கள் எங்களை நன்றாக ஆதரித்து வருகின்றனர். ஹசரங்கா ஒரு ரத்தினம். அவர்  சூப்பர் ஸ்டார். அவர் நிறைய கிரிக்கெட் விளையாட வே்ணடும். அவரையும் பாதுகாக்க வேண்டும். ஒரு கேப்டனாக எல்லா சூழ்நிலையிலும் அவருக்கு ஆதரவாக இருப்பேன், என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில், பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இலங்கை அணியினர் சிறப்பாக ஆடினர். எங்கள் அணியில் கடைசியில் ஹெட்மயர் அற்புதமாக பேட்டிங் செய்தார். இதைத்தான் அவரிடமிருந்து விரும்புகிறோம். நான் உள்பட அனுபவ வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது என்பதை மறைக்கப்போவதில்லை, என்றார். இதே பிரிவில் நேற்று மாலை நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Tags : West Indies ,Hasaranga ,Sri Lanka ,Shanaka , West Indies, Sri Lanka, World Cup T20
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்