ஆந்திராவில் நடந்த இருவேறு சாலை விபத்தில் கூலி வேலைக்கு ஆட்டோவில் சென்ற 6 பெண்கள் உள்பட 8 பேர் மரணம்..!!

அனந்தபுரம்: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். கர்லதிண்ணி மண்டலம் கொப்பளக்குண்டா கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பொத்தவடுகூரில் பருத்தி விவசாய பணிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். கூட்டியில் இருந்து மாமடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பெண் கூலி தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள்.

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இருவர் மீது கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாமடிமடலம் எடுரூர் கிராமத்தை சேர்ந்த யாகூர் மற்றும் நாராயணசாமி என்பது தெரியவந்தது. தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதா? அல்லது மது போதையில் நிகழ்ந்த விபத்தா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: