×

உப்புமாக்கு நான் சொத்தையே எழுதி வச்சிடுவேன்!- நடிகர் சரவணன்

நன்றி குங்குமம் தோழி

என் சமையல் அறையில்
 

‘‘எங்க வீட்டில் வாரத்தில் ஐந்து நாட்கள் அசைவ உணவு தான் இருக்கும். மட்டன், நாட்டுக்கோழின்னு அம்மா ரொம்ப சுவையா சமைப்பாங்க. அதுவும் அவங்க இட்லிக்கு செய்யும் மட்டன் கறிக்குழம்புக்கு நான் இன்றும் அடிமை’’ என்று தனக்கும் உணவுக்கும் இருக்கும் உறவு பற்றி விவரித்தார் சரவணன்.

‘‘அம்மா சேலம் ஜி.எச்சில் ஸ்டாப் நர்சா வேலைப் பார்த்து வந்தாங்க. என்னுடன் சேர்ந்து நாங்க ஐந்து பேர். அம்மா காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்திடுவாங்க. கூடவே என்னையும் எழுப்பிடுவாங்க. நான் சமையலுக்கு அவங்களுக்கு தேவையான எல்லா உதவியும் செய்து தருவேன். அப்ப நான் நான்காம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். நான் சின்ன பையன் என்பதால் அம்மா என்னை சமைக்க விடமாட்டாங்க. ஆனா அவங்க சமைக்கும் போது, கூடவே இருந்து எப்படி செய்றாங்கன்னு பார்ப்பேன்.

அதன் பிறகு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, அம்மா வேலைக்கு போகும் போது நானே சமையல் செய்து அவங்களுக்கு டப்பாவில் போட்டு கொடுத்திருக்கேன். அப்படித் தான் நான் சமைக்கவே கற்றுக் கொண்டேன். அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. அவங்க வைக்கும் கறிக்குழம்புக்கு தனி சுவை இருக்கும். அதே போல் இட்லிக்குன்னு ஒரு குருமா வைப்பாங்க. இதை சேலத்தில் எல்லாருடைய வீட்டிலும் செய்வாங்க.

சொல்லப்போனா சேலம் ஸ்பெஷல் குருமான்னு கூட சொல்லலாம். மிளகாய் தூள் சேர்க்காம, பச்சைமிளகாய் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து அந்த குருமா வைப்பாங்க. தக்காளி குழம்பு மாதிரி தான் இருக்கும். உருளைக்கிழங்கு மட்டுமே தான் அந்த குருமாவில் சேர்ப்பாங்க. அது ரொம்பவே பிடிக்கும். அந்த குழம்பு வச்சா இட்லி எவ்வளவு உள்ளே போகுதுன்னே தெரியாது. அதே போல் அவங்க செய்யும் மட்டன் குழம்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதை தவிர உலகத்தில் யாருக்கும் பிடிக்காத உப்புமா என்னுடைய ஆல் டைம் ஃபேவரெட் உணவு. இதை எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்’’ என்றவர் அந்த ரவை உப்புமாவையே ஏழு விதமா செய்வாராம்.

‘‘அம்மா வேலைக்கு போகும் போது, பல தடவை அவங்களுக்கு காலை சிற்றுண்டியா நானே உப்புமா செய்து கொடுத்திருக்கேன். அவங்க சமைக்கும் போது கற்றுக் கொண்டது இப்ப ரொம்பவே உதவியா இருக்கு. ஒரு காலத்தில் சாப்பாடுக்காக வாழ்ந்தேன். இப்போ வாழ்வதற்காக சாப்பிடுறேன். கொஞ்சம் டயட் இருக்க ஆரம்பிச்சு இருக்கேன். முன்பு எவ்வளவுக்கு எவ்வளவு நான் சுவைத்து சாப்பிட்டேனோ, இப்ப எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதுக்காக சாப்பிடாம பட்டினி இருக்கல. அளவோட சாப்பிடுறேன் அவ்வளவு தான்’’ என்றவர் தான் முதன் முதலில் வெளியே சாப்பிட்ட உணவு பற்றி பகிர்ந்து கொண்டார்.

‘‘பள்ளியில் என்.சி.சின்னு, (NCC - National Cadet Corps) மிலிட்டரியோட இணைந்து செயல்படும் ஒரு அமைப்பு. பெரும்பாலும் எல்லா பள்ளியிலும் இது இருக்கும். அதில் இருக்கும் மாணவர்கள் காலை பள்ளிக்கு வந்ததும் பரேட் செய்யணும். பரேட் முடிந்ததும், எல்லாருக்கும் சிறப்பு உணவு கொடுப்பாங்க. அதாவது என்.சி.சி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி தனியா ெகாடுப்பாங்க. அதில் பொங்கல், இட்லி, பூரி கிழங்குன்னு விதவிதமான உணவுகள் இருக்கும். அப்ப நான் எட்டாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அதுதான் நான் முதன் முதலில் வீட்டு சாப்பாட்டை தவிர்த்து வெளியே சாப்பிட்ட உணவு. அதன் பிறகு கல்லூரியில் படிக்கும் போது தான் நான் வெளியே சாப்பிட்டேன். அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது.

கல்லூரியில் நான் படிக்கும் போது, சேலம் ரயில் நிலையம் அருகே உள்ள மணிகண்ட விலாஸ் ஓட்டலில் போய் சாப்பிடுவேன். அங்க பரோட்டா ரொம்ப நல்லா இருக்கும். சாஃப்டா, சின்னதா காய்ன் சயிசில் இருப்பதால் அதை காய்ன் பரோட்டான்னு சொல்வாங்க. இதற்கு அவங்க கடையில் கொடுக்கும் சால்னாவே ரொம்ப பிரமாதமா இருக்கும். அதே கடையில் பிரியாணியும் ரொம்ப நல்லா இருக்கும். இப்பவும் அந்த கடை இருக்கு. நான் இப்பக்கூட சேலத்துக்கு போனா அந்த கடையில் பரோட்டா மட்டன் சாப்ஸ் வாங்கி சாப்பிடுவேன்.

அதே போல் சேலம் தியேட்டர் வாசலில் ஒரு தள்ளு வண்டி கடை இருக்கும். அங்க வெண்ணை தோசை ஒரு கடையில் கிடைக்கும். எண்ணை அல்லது நெய்க்கு பதில் வெண்ணையால தோசை சுட்டு தருவாங்க. 1989 முதல் இந்த கடை இயங்கி வருது. இரண்டாம் காட்சி படம் பார்த்திட்டு வரும் போது, அங்கு வெண்ணை தோசை சாப்பிடாம வரமாட்டேன். அதுக்கு சாம்பார் சட்னி மட்டும் இல்லை மட்டன், சிக்கன் சால்னாவும் தருவாங்க. அவ்வளவு சுவையா இருக்கும்’’ என்றவர் சேலத்தில் பிரபல இயக்குனர்கள் ஷூட்டிங்காக வரும் போது, நடிப்புக்கு சான்ஸ் கேட்டு தான் இவர் சினிமா உலகிற்குள் நுழைந்துள்ளார்.

‘‘நடிக்க வாய்ப்பு கிடைச்சதும் நான் சென்னைக்கு குடிபெயர்ந்தேன். பொதுவாகவே ஷூட்டிங் என்றால் அவங்களே சாப்பாடும் கொடுத்திடுவாங்க. நான் ஹீரோ என்பதால் எனக்கு ஸ்பெஷல் கேரியரில் சாப்பாடு வரும். அதில் எதுவுமே இருக்காதுன்னு சொல்ல முடியாது. மீன், மட்டன், சிக்கன்னு எல்லா வெரைட்டியும் அந்த கேரியரில் வச்சிருப்பாங்க.

91ல் இருந்து அந்த சாப்பாடு தான் ஷூட்டிங் போது சாப்பிட்டு வறேன். அதே போல் நடிகர் ஆர்.சுந்தராஜனுடன் சேர்ந்து சாப்பிட்ட அனுபவங்கள் பல. அவர் ஒரு உணவு பிரியர். அவருக்கு எந்த ஊரில் என்ன சாப்பாடு ஃபேமஸ்ன்னு ஒரு லிஸ்டே போட்டு வச்சிருப்பார். பெரிய பெரிய ஓட்டலில் எல்லாம் நாங்க போய் சாப்பிட்டது இல்லை. சாதாரண கடையில் அதுவும் சந்து சந்தா இருக்கும் கடையை தேடிப் போய் சாப்பிடுவோம். அதுவே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அவரோட போய் சாப்பிட்டு பழகினதால, நான் எந்த ஊருக்கு போனாலும், அங்க இருக்கும் சின்ன சின்ன கடையை தேடிப் போய் சாப்பிடுவேன்.

தேனியில் நாகர் பரோட்டா கடை ரொம்ப ஃபேமஸ். அங்க பரோட்டா அவ்வளவு ருசியா இருக்கும். சின்னதா மிருதுவா இருக்கும். எல்லா விதமான மட்டன், சிக்கன் சால்னா இருக்கும். இதை நாம தனியா ஆர்டர் செய்து சாப்பிடணும். இல்லைன்னா பரோட்டாவோடு ஒரு சால்னா தருவாங்க. அதுவே அவ்வளவு ருசியா இருக்கும். தேனிக்கு நான் 91ல் போனேன். அப்ப போன போது சாப்பிட்டேன். இப்ப சமீபத்துல போய் சாப்பிட்டேன். 20 வருஷம் முன்னாடி சாப்பிட்ட அதே சுவை மாறாம இன்னும் அப்படியே மெயின்டெயின் செய்றாங்க.

திண்டுக்கல் வேணு பிரியாணி எனக்கு ரொம்ப பிடிச்ச கடை. பிரியாணி சாப்பிடவே அங்க போய் இருக்கேன். சில சமயம் அந்த பிரியாணி சாப்பிடணும்ன்னு தோணுச்சுன்னா, என் நண்பர்கள் அங்க இருக்காங்க. அவங்களுக்கு ஒரு போன் போட்டா போதும், ஃபிளைட்டில் யாரிடமாவது கொடுத்துவிடுவாங்க. காலை 11 மணிக்கு பார்சல் செய்தா, எனக்கு இங்க மதியம் ஒரு மணிக்கெல்லாம் கிடைச்சிடும்.

நான் இன்றும் திரும்ப திரும்ப சாப்பிட போகும் உணவகம் சேலம் மங்கள விலாஸ். சின்ன வயசில் இருந்தே அப்பாவோட அங்க போய் சாப்பிட்டு இருக்கேன். மட்டன் சுக்கா, மூளை, ஈரல் வறுவல், கிட்னின்னு ஆட்டோட எல்லா பாகங்களிலும் சமைச்சு தருவாங்க. அது தான் அங்க ஃபேமஸ். மதுரை கோணார் கடை. கறி தோசை ரொம்ப பிடிக்கும். எப்ப மதுரை போனாலும் அங்க சாப்பிடாம வந்தது இல்லை. அதே போல திருச்சியில் ஒரு கடை. பெயர் தெரியல. அங்க பிரியாணி ரொம்ப நல்லா இருக்கும். பெரிய கடை எல்லாம் கிடையாது. சாதாரண சின்ன கடை தான்.

பிரியாணி அவ்வளவு மணமா இருக்கும். அவங்க பார்சல் கட்டி கொடுத்தா இரண்டு மணி நேரம் வரை அதே சூடு குறையாமல் இருக்கும். அதே போல ஏ.சி காரினுள் அந்த பார்சல் இருந்தா போதும், கார் முழுக்க பிரியாணி வாசனை நம்மை சாப்பிட தூண்டும். உடனே நான் காரை நிறுத்த சொல்லி பார்சலை பிரித்து சாப்பிட்ட பிறகு தான் மறு வேலையே பார்ப்பேன்’’ என்றவர் வெளிநாடு சென்ற போதும் அங்கும் நம்முடைய பாரம்பரிய உணவைத்தான் தேடிப் போய் சாப்பிடுவாராம்.

‘‘வெளிநாடு என்றால், நான் லண்டன், பாரிஸ், துபாய், மலேசியா, சிங்கப்பூர் எல்லாம் போயிருக்கேன். நான் போகும் எல்லா நாட்டிலும் அங்கு என் நண்பர்கள் இருக்காங்க. அதனால் பெரும்பாலும் அவங்க வீட்டில் தான் சாப்பாடு இருக்கும். பல சமயம் நானே அவங்க வீட்டில்  சமைத்திருக்கேன். அவங்க வெளியே போய் சாப்பிடலாமான்னு கூட சொல்லுவாங்க. ஆனால் எனக்கு என்னவோ அந்த உணவில் குறிப்பா அசைவத்தில் வரும் கவுச்சி வாடை பிடிக்காது. அதனாலேயே வீட்டிலேயே சமைச்சு சாப்பிடுவேன். தவிர்க்க முடியாத நேரத்தில் நான் வெளியே சாப்பிட்டால் அது பீட்சா மட்டும் தான் இருக்கும். அந்த சமயத்தில் ரசம் அப்பளம் இருந்தாலே தேவாமிருதமா இருக்கும்.

சென்னையை பொறுத்தவரை புஹாரியில் பிரியாணி, பட்டர் நான், சிக்கன் மஞ்சூரியன் எனக்கு பிடித்தமான உணவு. கேரளா சாப்பாடும் விரும்பி சாப்பிடுவேன். ஆரஞ்சு படத்திற்காக கேரளாவில் ஷூட்டிங் போன போது, அங்கு தங்கி இருந்த 23 நாட்களும் கேரளா உணவு தான் சாப்பிட்டேன். அவங்களின் அந்த மட்ட அரிசிக்கு பருப்பு சாம்பார் அவ்வளவு ருசியா இருக்கும்’’ என்றவர் சமைப்பதில் கில்லாடியாம்.

தக்காளி சாதம்

தேவையானவை

வெஙகாயம் - 3
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 2
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
வடித்த சாதம் - 2 கப்.

செய்முறை

சாதத்தை தனியாக வடித்து அதில் சிறித நல்லெண்ணை சேர்த்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணை சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், அதில் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு மசிந்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா எல்லாம் கலந்து பச்சை வாசனை போனதும் எல்லாம் சேர்ந்து சுருண்டு வரும். அதில் வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும். கடைசியில் கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும். சூடாக பக்கோடா, அப்பளம், உருளை சிப்ஸ், ஆம்லெட், முட்டை பொடிமாசுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

ப்ரியா

Tags : Uppumaku - Actor Saravanan ,
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!