நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை கைவிட போலந்து, வியட்நாம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்து..!!

டெல்லி: நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை கைவிடுவதற்கான ஒப்பந்தத்தில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் ஐநாவின் COP26 மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த மாநாட்டில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. அக்டோபர் 31ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு நவம்பர் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. காடுகள் அழிப்பு தடுப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதில் இந்தியா கையெழுத்திடவில்லை. இந்நிலையில் நிலக்கரியை கைவிடுவதற்கான  மற்றொரு முக்கிய ஒப்பந்தத்தில் போலந்து, வியட்நாம், சிலி போன்ற நிலக்கரி அதிகம் பயன்படுத்தும் 40க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

ஆனால் இதில் அமெரிக்கா, சீனா கையெழுத்திடவில்லை. இனி உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ புதிய நிலக்கரி மின் நிலையங்கள் அமைக்கப்படமாட்டாது என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். அத்துடன் 2030ம் ஆண்டுக்குள் நிலக்கரி மூலம் மின்சாரம் பெறும் திட்டம் படிப்படியாக நிறுத்தப்படும் என்பது மற்றொரு அம்சமாகும். ஏழை நாடுகளுக்கு இந்த அவகாசம் 2040ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு சுற்றுச்சூழல் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. நிலக்கரி வணிகத்திற்கு கடன் கொடுக்க மாட்டோம் என்று உலகின் ஏழு பெரிய வங்கிகளும் உறுதியளித்துள்ளது.

Related Stories: