×

பென்குயின் பறவைகள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பைகுலா விலங்கியல் பூங்காவில் பார்வையாளர் வருகை 30% அதிகரிப்பு-டிக்கெட் கட்டண அதிகரிப்பால் வருமானம் 500% உயர்வு

மும்பை : பென்குயின் பறவைகள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பைகுலா விலங்கியல் பூங்காவில் பார்வையாளர் வருகை 30% அதிகரித்துள்ளதாகவும், டிக்கெட் கட்டண அதிகரிப்பால் வருமானம் 500% உயர்ந்துள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள தெரிவித்தனர். கொரோனாவின் முதல் தாக்கத்தை தொடர்ந்து பைகுல்லா விலங்கியல் பூங்கா மூடப்பட்டது. பின்னர் பிப்ரவரி மாதம் 15ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கத்தை தொடர்ந்து விரைவிலேயே மீண்டும் மூடப்பட்டது. கொரோனா தொற்று குறையத் தொடங்கியதை தொடர்ந்து 8 மாதங்களுக்கு பின்னர் இம்மாதம் 1ம் தேதி பைகுலா விலங்கியல் பூங்கா மீண்டு திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே 1,600 பேர் பூங்காவிற்கு வந்தனர். இதன் மூலம் மும்பை மாநகராட்சிக்கு ₹68,725 வருவாய் கிடைத்தது.

 சாமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வும் கவுன்சிலருமான ராய்ஸ் ஷேக் எழுத்து மூலம் கேட்ட கேள்விக்கு மாநகராட்சி அதிகாரிகள் பின்வரும் பதிலை அளித்துள்ளனர்.
2015-16ம் ஆண்டு பைகுலா விலங்கியல் பூங்காவிற்கு 12.51 லட்சம் பேர் வந்துள்ளனர். இதனால் டிக்கெட் விற்பனை மூலம் ₹70.03 லட்சம்  வருவாய் கிடைத்தது. 2017-18ம் ஆண்டு 17.57 லட்சம் பேர் வந்தனர். இதன் மூலம் விலங்கியல் பூங்காவிற்கான வருமானம் ₹4.36 கோடியாக அதிகரித்தது.  ஆனால் 2018-19ம் ஆண்டு பூங்காவிற்கு வந்தவர்களின் எண்ணிக்கை வெறும் ₹12.70 லட்சமாக குறைந்தது. ஆனால் வருமானம் ₹5.42 கோடியாக அதிகரித்தது. 2019-2020ம் ஆண்டு 10.66 லட்சம் பேர் மட்டுமே வந்தனர். ஆனால் வருமானம் ₹4.57 கோடியாக இருந்தது.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 இதன் இடையே பைகுலா விலங்கியல் பூங்காவின் பராமரிப்புக்கு நடப்பு ஆண்டு ₹15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போது பென்குயின் பறவைகளால் வன விலங்கு பூங்காவின் வருமானம் ₹12.26 கோடியாக அதிகரித்துவிட்டது என்றும் இதனால் பராமரிப்பு செலவை ₹15 கோடியாக அதிகரித்தது சரியே என்று மாநகராட்சியின் கமிஷனர் இக்பால் சகால் கடந்த செப்டம்பர் மாதம் நியாயப்படுத்தினார். 2017ம் ஆண்டில் இருந்து வன விலங்கு பூங்காவின் வருமானம் மற்றும் செலவு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஷேக் உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சியை வலியுறுத்தியுள்ளனர்.

 பென்குயின் பறவைகளை அறிமுகம் செய்த பின்னர் வனவிலங்கு பூங்காவிற்கு பார்வையாளர் வருகை பெருமளவில் அதிகரிக்கவில்லை என்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன என்றும் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் தான் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் ஷேக் கூறினார். பராமரிப்புக்கு ₹15 கோடி ஒதுக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த மாநகராட்சி அதிகாரிகள், சீர் செய்யும் பணி நடந்த காரணத்தால் 2019ம் ஆண்டு பூங்காவில் பல இடங்கள் மூடப்பட்டிருந்ததாகவும் இதனால்தான் வனவிலங்கு பூங்காவிற்கு வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர்.

பென்குயின் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு எத்தனை பார்வாயாளர்கள் வந்தார்கள் என்ற விவரம் மாநகராட்சியிடம் இல்லை என்று ஷேக் கூறினார். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் பென்குயின் இருக்கும் இடத்தை பார்வையிட என தனிக்கட்டமோ தனி டிக்கெட்டோ வழங்கப்படுவதில்லை என்றும் வனவிலங்கு பூங்காவிற்கு விஜயம் செய்த அனைவரும் பென்குயின் இடத்தை பார்வையிட்டனர் என்றே கருதப்படுவதாகவும் தெரிவித்தனர். ₹2.10 கோடியாக இருந்த பைகுலா வனவிலங்கு பூங்காவின் வருமானம் 2017ம் ஆண்டு பென்குயின்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்  ₹12.26 கோடியாக அதிகரித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Byculla Zoo , MUMBAI: Visitors to the Byculla Zoo have seen a 30% increase in revenue since the introduction of the penguin and 500% increase in ticket revenue.
× RELATED பென்குயின் பறவைகள் அறிமுகம்...