மாமூலாக வசூலித்த பணத்தை மாற்ற 27 போலி நிறுவனங்கள் மூலம் மோசடி-அனில் தேஷ்முக் மீது அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை : மாமூலாக வசூலித்த பணத்தை மாற்ற, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மொத்தம் 27 போலி கம்பெனிகளை பயன்படுத்தியுள்ளார் என நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் ₹100 கோடி ஊழல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதனை தொடர்ந்து மும்பை ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் அனில் தேஷ்முக் மீது சிபிஐ எப்.ஐ.ஆர்.பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த பிரச்னையில்தான் அனில் தேஷ்முக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் அப்போது அவர் கூறியிருந்தார். இதன் இடையே சிபிஐயின் எப்.ஐ.ஆர். அடிப்படையில் அமலாக்கத் துறை அனில் தேஷ்முக் மீது பண பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்டதாக கூறி தனியாக எப்.ஐ.ஆர்.பதிவு செய்து விசாரணை நடத்தியது. மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாகத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து அனில் தேஷ்முக்கின் தனி செயலாளர் சஞ்சய் பாலண்டே(51) மற்றும் தனி உதவியாளர் குந்தன் ஷிந்தே ஆகியோரை அமலாக்கத் துறை கைது செய்தது. இருவரும் இப்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 இதனிடையே, பண பரிவர்த்தனை மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் தேஷ்முக்கிற்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் பலமுறை சம்மன் அனுப்பியும் அனில் தேஷ்முக் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருடைய கோரிக்கையை மும்பை ஐகோர்ட் நிராகரித்துவிட்டது. மனுவும் ரத்து செய்யப்பட்டது.

 இதனை தொடர்ந்து திங்கள் கிழமை அனில் தேஷ்முக் விசாரணைக்காக பலார்ட் பியரில் இருக்கும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். காலை 11.30 மணிக்கு ஆஜரான அனில் தேஷ்முக்கிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர். நேற்று முன்தினம் அனில் தேஷ்முக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பார்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் அனில் தேஷ்முக் ₹4.70 கோடி வசூல் செய்ததாக கோர்ட்டில் அமலாக்கத் துறை தெரிவித்தது. இப்போது வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ள உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வஷே மூலம் இந்த பணத்தை அப்போது அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் வசூல் செய்தார்.

 இந்த பணத்தை குந்தன் ஷிந்தே மற்றும் சஞ்சய் பாலாண்டே ஆகியோர் மூலம் சச்சின் வாஷே அனில் தேஷ்முக்கிடம் கொடுத்தார். இதில் ₹4.18 கோடியை போலி கம்பெனிகள் மூலம் நாக்பூரில் உள்ள ஒரு கல்வி அறக்கட்டளையின் கணக்கில் அனில் தேஷ்முக் டெபாசிட் செய்தார். நன்கொடை என்ற பெயரில் இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டது. இந்த கல்வி அறக்கட்டளை அனில் தேஷ்முக் மற்றும் அவரது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பணத்தை முறைகேடாக பரவர்த்தனை செய்வதற்காக அனில் தேஷ்முக் 27 போலி கம்பெனிகளை பயன்படுத்தினார். இதில் 13 கம்பெனிகள் அனில் தேஷ்முக்கின் பெயரில் உள்ளது. 14 கம்பெனிகள் அனில் தேஷ்முக்கின் உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் பெயர்களில் உள்ளதாக அமலாக்கத் துறை கோர்ட்டில் தெரிவித்தது.

ஒர்லியில் அனில் தேஷ்முக்கின் மனைவி ஆர்த்தி பெயரில் ஒரு வீடு உள்ளது. இந்த வீடு 2004ம் ஆண்டு முழு பணம் கொடுத்து வாங்கப்பட்டது. ஆனால் 2002ம் ஆண்டு அனில் தேஷ்முக் அமைச்சராக இருந்த போது இந்த வீடு அவர் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் இந்த தகவலை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அனில் தேஷ்முக்கிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த 6ம் தேதி வரை அனில் தேஷ்முக்கை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

Related Stories: