×

கைத்தறிக்கு புத்துயிர் அளிக்க குமரியில் இனி சேலையும் நெய்வோம்....களம் இறங்கிய பெண்கள்

நாகர்கோவில் : அழகழகாய் ஆடைகள்... அத்தனையும் கைத்தறி!! அணி, அணியாய் இளையோர்கள், அணிந்திடுவீர் கைத்தறி!! என்று தேசிய கைத்தறி தினத்தையொட்டி தமிழக அரசு வெளியிட்டிருந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கைத்தறி நெசவாளர்களை வாழ வைப்போம். அனைவரும் கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைவரும் வாரம் ஒருமுறையாவது கைத்தறி ஆடைகளை அணிந்து கைத்தறி நெசவாளர்களை காக்க வேண்டும் என்பது தான் ஒன்றிய மற்றும் மாநில அரசின் வேண்டுகோள் ஆகும்.

ஆடைகள் தயாரித்து நம் மானம் காக்கும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வு தற்போது இருண்ட காலமாக மாறி உள்ளது. தலைமுறை, தலைமுறையாக நெசவு தொழிலில் இருந்த குடும்பங்கள், இப்போது கூலி வேலைக்காக இடம் பெயருகிறார்கள். நாகரீகம் என்ற பெயரில் இளைய சமுதாயத்தின் ஆடைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் கைத்தறி நெசவு தொழிலை புரட்டி போட ஓர் காரணமாக அமைந்தது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவில் கைத்தறி துணி உற்பத்தி இன்னமும் நடக்கிறது. நம் நாட்டின் ெபாருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் வகிப்பது நெசவு தொழில் தான். ஒரு காலத்தில் தமிழகத்தில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான கைத்தறி தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.அந்த வகையில், குமரி மாவட்டத்தில் வடசேரி, பள்ளியாடி, அம்சி, உட்பட பல்வேறு பகுதிகளில் கைத்தறி நெசவு தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருந்தன. தற்போதும் மாவட்டத்தில் 2500 முதல் 3000 கைத்தறி நெசவு தொழிற்கூடங்கள் செயல்படுகின்றன.

ஒரு காலத்தில் 10 ஆயிரம் நெசவு தொழிற்கூடங்கள் இருந்துள்ளன. சாயம் தோய்த்தல், பாவு சரி செய்தல், தார் சுற்றுதல், ஜரிகை வடிவமைத்தல் என பல நுணுக்கமான வேலை பாடுகள் கொண்ட ஆடைகள் வடிவமைப்பில் குமரி மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். நெசவாளர்கள் நிறைந்த தெருக்கள், காலனிகள் அதிகம் இருந்துள்ளன.

குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கைத்தறி ஆடைகள் கேரளா மற்றும் வெளி நாடுகளுக்கு அதிகளவில் செல்கிறது. இன்னமும் ஓணம் பண்டிகை என்றால் கேரளாவுக்கு குமரி மாவட்டத்தில் இருந்து தான் கைத்தறி ஆடைகள் செல்லும். கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன் தொடங்கிய கொரோனா வைரஸ் ஊரடங்கு நெசவாளர்களையும் புரட்டி போட தவற வில்லை. குடும்ப செலவுக்கே வருமானம் இல்லாமல் கஷ்டப்பட தொடங்கினர்.

நாளொன்றுக்கு ரூ.150 முதல் 200 வரை வருமானம் ஈட்டி வந்த இவர்களுக்கு வேலை இல்லாததால் அந்த வருமானமும் இல்லாத சூழ்நிலையை கொரோனா உருவாக்கியது. இப்போது தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் ஓரளவு மெல்ல, மெல்ல எழுந்து வருகிறார்கள். கைத்தறி துறையை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறது. அந்த வகையில் ஒன்றிய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கைத்தறி வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் ‘சமர்த்’ என்ற திட்டத்தின் மூலம் கைத்தறி தொழிலாளர்களுக்கு வாழ்வியல் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கைத்தறி வளர்ச்சி ஆணையமும் இணைந்து இந்த மேம்பாட்டு பயிற்சியை அளிக்கிறார்கள்.

கைத்தறி நெசவு அதிகம் உள்ள பகுதிகளில் எந்த மாதிரியான புதுமையான திட்டங்களை செயல்படுத்த முடியும் என்ற அடிப்படையில் பெண்கள், தொழிலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது முதற்கட்டமாக கைத்தறி சேலைகளில் முதல் ரகம் தயாரிப்புக்கான பயிற்சி நாகர்கோவில் வடசேரியில்அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை தமிழ்நாடு அரசின் கைத்தறி உதவி இயக்குனர் சங்கரேஸ்வரி, ஒன்றிய அரசின் நெசவாளர் சேவை மையம் ( சென்னை) உதவி இயக்குனர் மாரிமுத்து ஆகியோர் மேற்பார்வையிட்டு தேவையான உதவிகளை செய்தனர். பயிற்சி முடித்தவர்களுக்கு ‘சமர்த்’ திட்டத்தின் கீழ் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் பேசிய உதவி இயக்குனர் மாரிமுத்து, இங்கு பயிற்சி முடித்த பெண்கள் கைத்தறி சேலைகள் தயாரிப்பில் முழு அளவில் ஈடுபட வேண்டும். தற்போது சாதாரண ரகத்துக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஈடுபாட்டுடன் இதை செயல்படுத்தி அடுத்தடுத்து புதுமையான ரகங்களை உருவாக்கி கைத்தறி நெசவு மேம்பட உழைக்க வேண்டும் என்றார். உதவி இயக்குனர் சங்கரேஸ்வரி கூறுகையில், குமரி மாவட்டத்தில் நெசவும் பிரதான தொழிலாகும். இந்த தொழிலில் உள்ள பெண்கள் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக சேலை ரகங்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன என்றார். பயிற்சி முடித்த பெண்கள் கூறுகையில், கைத்தறி சேலையில் பல்வேறு விதமான ரகங்களை உருவாக்க முடியும். தீவிரமாக இதை செயல்படுத்தி குமரி கைத்தறி சேலைகள் என்ற தனித்துவமான பெயரை உருவாக்க தீவிரமாக உழைப்போம் என்றனர்.

மெல்லிய நூல் ரகங்கள்

வேஷ்டி, துண்டு, போர்வைகளுக்கான நூல்கள் போல் இல்லாமல் சேலைக்களுக்கான நூல் ரகங்கள் என்பது மிகவும்  மெல்லியதாக இருக்கும். நூல் கவுண்ட் குறைவு என்பதால் மிகவும் துல்லியமாக இதை நெய்தல் வேண்டும். ஒரு நாளைக்கு இரு வேஷ்டிகள் நெய்யலாம். ஒரு வேஷ்டிக்கு ₹135 வரை கூலி கிடைக்கும். ஆனால் சேலை ரகங்களை மிக நேர்த்தியாக நெய்தல் வேண்டும் என்பதால் ஒரு நாளைக்கு ஒன்று தான் செய்ய முடியும். மற்ற இடங்களில் ஒரு சேலை நெய்தலுக்கு ₹270 கூலியாக கொடுக்கிறார்கள்.

மானியத்துடன் பயிற்சி

குமரி மாவட்டத்தில் முதல் முறையாக கைத்தறி சேலைகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக 20 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு வடசேரி பெரிய ராசிங்கன் தெருவில் உள்ள கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் இதற்கான பயிற்சி நடைபெற்றது. இதுவரை  குமரி மாவட்டத்தில் வேஷ்டிகளும், துண்டுகளும் தான் தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது தான் முதல் முறையாக கைத்தறி சேலை ரகங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதற்கான பயிற்சியில் 20 பெண்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வீதம் (5 மணி நேரம் செய்முறை, 2 மணி நேரம் விளக்க வகுப்பு ) 45 நாட்கள் இந்த பயிற்சி நடந்தது. பயிற்சி காலத்தில் பெண்களுக்கு மானியமும் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

கூலியை உயர்த்த வேண்டும்

குமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை சங்க தலைவர் சகாயராஜ் கூறுகையில், கைத்தறியில் கூலி குறைவாக உள்ளது. இதனால் பலர் இந்த தொழிலில் இருந்து மாறி உள்ளனர். இது தவிர மின்சாரத்தில் இயங்க கூடிய பவர் லூம் வந்து விட்டன. 1 மணி நேரத்தில் 10 வேஷ்டிகள் இதில் உருவாக்க முடியும். கைத்தறி நெசவு மூலம் அதிகபட்சமாக 4 வேஷ்டிகள் தான் செய்ய முடியும். இது போன்ற பிரச்னைகள் உள்ளன. இந்த நிலையில் புதுமைகளை புகுத்தினால் கைத்தறி தொழிலாளர்கள் அதிகம் பேர் வருவார்கள் என்பதற்காக பெண்களுக்கு சேலை நெய்தல் பயிற்சி ஒன்றிய மற்றும் மாநில அரசின் ஏற்பாட்டின் பேரில் நடந்துள்ளது. கூலி உயரும் போது நிச்சயம் கைத்தறி தொழிலுக்கு அதிகம் பேர் வருவார்கள் என்றார்.

Tags : sari ,Kumari , Nagercoil: Beautiful clothes ... all handlooms !! Team, team youngsters, wear linen !! That national handloom
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து