×

தொடர் தோல்வி அடைந்த திட்டத்தை தூசி தட்டுவதா? பெரியாறில் புதிய அணை அவசியமில்லை

*  உச்சநீதிமன்றம் கூறியும் கேரள அரசு தொடர் முரண்டு
*  பெரும் போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் தயார்

கூடலூர்: பெரியாறில் புதிய அணை தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தும் கேரள அரசு தொடர் முரண்டு பிடித்து வருகிறது. இதனால் பெரும் போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர்.கடந்த 1976ல் கேரளா கட்டிய இடுக்கி அணைக்கு பெரியாறு அணை தண்ணீரை கொண்டு செல்வதற்காகவே, 1979ல் பீர்மேடு எம்எல்ஏ தாமஸ் மூலம், முதல்முறையாக பெரியாறு அணை பலவீனம் அடைந்துள்ளதாக கூறி,  கேரள அரசு மறைமுகமாக போராட்டத்தை தூண்டிவிட்டது. அப்போதே அணையை பார்வையிட்ட மத்திய நீர்வளத்துறை ஆணைய அதிகாரிகள், கேரளாவின் நிர்பந்தத்தால் பெரியாறு அணையை ஒட்டி 300 மீட்டர் தூரத்திற்குள் புதிய அணை கட்ட திட்டமிட்டனர். அணையின் நீர்மட்டத்தையும் 136 அடியாக குறைத்தனர். ஆனால் அங்கு நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளிலும் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் அத்திட்டத்தை கைவிட்டனர். அதன் பின்னரே மத்திய நீர்வள ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் பெரியாறு அணையை பலப்படுத்தும் விதமாக தமிழக அரசு கான்க்ரீட் தொப்பி அமைத்தல், கேபிள்ஆங்கரிங் செய்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளை செய்து, பெரியாறு அணையை புதிய அணைக்கு நிகராக்கினர். இருப்பினும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரளா அனுமதிக்கவில்லை.

142 அடியாக உயர்த்தலாம்...இதைத்தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 27.02.2006ல், நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், சி.கே.தாக்கர், பி.கே.பாலசுப்ரமணியன் அடங்கிய குழுவினர், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக தமிழக அரசு உயர்த்திக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கினர். இதை ஏற்காத கேரளஅரசு, “கேரள அணைகள் பாதுகாப்பு சட்டதிருத்தத்தை சட்டமன்றத்தில் ஏக மனதாக நிறைவேற்றியது. மேலும், 2009ம் ஆண்டு டிச.20ல் பெரியாற்றில் புதிய அணை என்ற கோரிக்கையோடு, தற்போதைய அணைக்கு 350 மீட்டர் தொலைவில் 5 இடங்களில் ஆழ்துளை அமைத்து பாறைகளின் உறுதித்தன்மை சோதனை நடத்தியது. இதில் 3 இடங்களில் 35வது மீட்டரில் பாறைகள் உறுதியற்ற தன்மையில் இருந்ததும், நீர்க்கசிவு இருப்பதும் தெரிந்தது. அதனால் அணை கட்ட சாத்தியமில்லை என இரண்டாம் முறையாக இத்திட்டம் கைவிடப்பட்டது.கேரளாவுக்கு மீண்டும் அடி...

கேரள அணைகள் பாதுகாப்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழகம் மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றதால், கடந்த 2010ல், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர்குழுவை நியமித்து, பெரியாறு அணையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள தலைசிறந்த அணை வல்லுநர்குழு மூலம், ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் மூலம் அணையின் அடிப்பகுதியில் உறுதி குறித்து ஆய்வு, அதிர்வலை மூலம் அணையின் பலம் கண்டு பிடிக்கும் ஆய்வு, அணையில் துளையிட்டு கலவை மாதிரி (கோர்சாம்பிள்) எடுத்து ஆய்வு என 13 ஆய்வுகள் செய்யப்பட்டது. ஆய்வுகள் முடிவின்படி அணை பலமாக உள்ளதாக ஐவர் குழு உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கை வழங்கியது. அதன் பின்பே உச்சநீதிமன்றம் கடந்த 2014ல் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது. இது பெரியாறு அணையை வைத்து பிழைப்பு நடத்தும் கேரள அரசியல்வாதிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புரளியை கிளப்பி குழப்பம்....
கடந்த 2015, மே 1ல் மூன்றாம் முறையாக கேரள அரசு தற்போதைய அணைக்கு 350 முதல் 500 மீட்டர் தூரத்தில், பாறை உறுதித்தன்மை சோதனை செய்தது. பூமிக்கடியில் இருபது மீட்டர் ஆழத்தில் நிலத்தின் உறுதி தன்மை அறிய மூன்று இஞ்ச் விட்ட அளவில் பாறைகளின் சாம்பிள்கள் எடுக்கப்பட்டதில் அங்கு அணை கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை என மூன்றாம் முறையாக இத்திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து 2019ல் நான்காம் முறையாக பெரியாற்றில் புதிய அணை என வல்லக்கடவு வனப்பாதையில் தற்போதய அணைக்கு கீழே 1,500 மீட்டர் தொலைவில் ஆய்வுப்பணியை தொடங்கி, கேரள மக்களை திசை திருப்பும் பணியில் கேரள அரசும், அரசியல்வாதிகளும் இறங்கினர். இதிலும் தோல்வி கண்டதால் தற்போது பெரியாறு “பெரியாறு அணையை இடிப்போம்... புது அணை கட்டுவோம்” எனும் கோஷத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்கு கேரள வழக்கறிஞர் ரசல்ஜாய் போன்றவர்களும் மக்களிடையே பெரியாறு அணை உடைந்து விடும் 35 லட்சம் மக்கள் இறப்பார்கள் என பொய்செய்தி பரப்பி வருகின்றனர். நான்கு முறை முறை சாத்தியக்கூறுகள் இல்லை என கைவிடப்பட்ட திட்டத்தை மீண்டும் கையிலெடுத்து மக்களை குழப்பும் கேரளாவின் இந்த போக்கு தேசிய ஒற்றுமைக்கும், ஒருமைப் பாட்டுக்கும் ஊறு விளைவிப்பதாகும். கேரளாவின் இப்போக்கை கண்டித்து தமிழக விவசாயிகள் பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயி பொன் காட்சிக்கண்ணன் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்றம் நியமித்த இந்தியாவின் தலைசிறந்த நிபுணர்கள் குழு அணையில் 13 கட்ட ஆய்வுகள் நடத்தி முடித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்பே 142 அடி தண்ணீர் தேக்கிக்கொள்ள தீர்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வலியுறுத்தி வரும் வேளையில், கேரளா புது அணை என்பதில் பிடிவாதமாக இருப்பது 152 அடிக்கு முட்டுக்கட்டை போடுவதற்காகத்தான். இதனால் பெரியாற்று உபரிநீரை 48 கி.மீ. தொலைவிலுள்ள இடுக்கி அணைக்கு திருப்பி விடலாம் என்பதே கேரளாவின் சதியாகும். ஏற்கனவே பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டதால் விவசாய நிலங்களில் 38 ஆயிரம் ஏக்கர் தரிசாக மாறியது. 26 ஆயிரம் ஏக்கர் இருபோக சாகுபடி நிலம் ஒருபோக சாகுபடியானது. ஆற்று நீரை நம்பிய 58 ஆயிரம் ஏக்கர் ஆழ்குழாய் சாகுபடிக்கு மாறியது. ஐந்து மாவட்டத்தில் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர். எனவே கேரளா புதிய அணை என்ற போக்கை கைவிட வேண்டும்’’, என்றார்.

பெரியாறு அணையால் 2,12,758 ஏக்கர் நிலங்கள் பயன்
1. கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு ( இருபோக சாகுபடி)  14,707 ஏக்கர்.
2. பிடிஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாய் ஆயக்கட்டு  5,146 ஏக்கர்.  
3. பெரியாறு பிரதான கால்வாய் ஆயக்கட்டு சோழவந்தான் (இருபோக சாகுபடி) 45,041 ஏக்கர்.
4. பெரியாறு பிரதான கால்வாய் ஆயக்கட்டு மேலூர் (ஒருபோகம்) 85,563 ஏக்கர்.
5. பெரியாறு பிரதான கால்வாய் (நீட்சி) ஆயக்கட்டு சிவசங்கை (ஒருபோகம்) 38,248 ஏக்கர்.
6. திருமங்கலம் பிரதான கால்வாய் மற்றும் நீட்சி ( ஒருபோகம்) 19,439 ஏக்கர்.
7. 18ஆம் கால்வாய் (பழனிவேல் ராஜன் கால்வாய்) 4614 ஏக்கர்.

நீர்மூழ்கி வீரர்கள் மூலம் ஆய்வு
மத்திய தொழில்நுட்பக் குழுவினர் உத்தரவின்பேரில் ஒரிசாமாநில தலைமை பொறியாளர் ரத்னகர்-தலாய் தலைமையில் நீர்மூழ்கி வீரர்கள் நவீனகேமராவுடன் நீருக்குள் மூழ்கி, பெரியாறு அணையின் அடிப்பகுதியை புகைப்படம் எடுத்து அணையின் உறுதி குறித்து ஆய்வு செய்தனர்.  
இந்திய நிலவியல்ஆய்வு நிலைய ஆய்வாளர்கள் ராஜேந்திர சங்வால், அபிஷேக்குமார், அரவிந்த், சார்லஸ்மணி தலைமையிலான குழுவினர்  அணைப்பகுயில் புவிஅமைப்பு, நிலவடிவமைப்பை ஆய்வு செய்து அணை உறுதித்தன்மையை உறுதி செய்தனர்.

மத்திய மண்ணியல் ஆய்வுநிலைய ஆராய்சியாளர்கள் அலெக்ஸ் வர்கீஸ், பீரேந்திர பிரசாத் தலைமையில், ஆயிரத்து 200 அடி நீளமுள்ள பெரியாறுஅணையில், ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் (ரிமோட் ஆபரேடிவ் அண்டர் வாட்டர் வெஹிகிள்) பயன்படுத்தி ஒருமாதம் வரை அணையின் அடிப்பகுதி முழுவதும் ஆய்வு செய்து அணையின் பலத்தை உறுதி செய்தனர்.மத்திய மண்ணியல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் முராரி ரத்னம் தலைமையில் பெரியாறுஅணை கட்ட பயன்படுத்திய சுருக்கி சுண்ணாம்பு, மணல் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து, சுண்ணாம்பு கலவையின் உறுதியை ஆய்வு செய்தனர்.

அதிர்வலை மூலம் பலம் கண்டுபிடித்தல்
மத்திய மண் மற்றும் கட்டுமான ஆராய்ச்சி நிலைய முதன்மை ஆராய்ச்சி அலுவலர் டாக்டர் திரிபாதி தலைமையிலான வல்லுநர்கள் அணையில் 72 இடங்களில் சோனிக் லாகிங் சோதனை (அதிர்வலைமூலம் அணையின் பலம் கண்டுபிடித்தல்) பதிவுசெய்து சோதனை நடத்தினர்.
பெரியாறு அணையை தமிழக அரசு பலப்படுத்தியபோது செய்த பிரதான பணியான, கேபிள் ஆங்கரிங் பணியின் பலம் குறித்து, புனேயைச் சேர்ந்த பிஎஸ்சி என்ஜினியர்ஸ் கம்பெனியின் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

‘கேரளாவுக்கு தெரியும்’
ஐந்து மாவட்ட விவசாய சங்க முன்னாள் தலைவர் அப்பாஸ் கூறுகையில், ‘‘புதிய அணை கட்டவேண்டும் என்றால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். அடுத்ததாக அந்த அணை நீரினை பயன்படுத்துபவர்களின் (தமிழகம்) அனுமதி பெறவேண்டும். பெரியாற்றில் புதிய அணை கட்ட சாத்தியமில்லை என்பது கேரள அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்கு தெரியும். கேரள மக்களை திசைதிருப்பவே அரசியல்வாதிகள் செய்யும் வேலை இது. 1979ல் மத்திய நீர்வள ஆணைய உத்தரவின்படி பெரியாறு அணையை பலப்படுத்த சிமெண்ட் கான்கிரீட்தொப்பி, கேபிள் ஆங்கரிங், சப்போர்ட் அணை ஆகிய பணிகள் நடைபெறும் போது கேரளா அரசின் உயர் அதிகாரிகளும், ஊழியர்களும் உடன் இருந்தார்கள். அவர்களின் ஒப்புதலின் பேரில்தான் இப்பணிகள் செய்யப்பட்டது. இந்தப் பணிகள் செய்ததினாலேயே அணை பன்மடங்கு பலம் பெற்று உள்ளது. பெரியாறு அணை இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும்’’ என்றார்.

Tags : Periyar , Dusting down a series of failed projects? There is no need for a new dam in Periyar
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...