பண்ருட்டி அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஓடை தரைப்பாலம்

பண்ருட்டி:  பண்ருட்டி அருகே பெரியகாட்டுப்பாளையம், மேலிருப்பு, கீழருப்பு, விசூர் ஆகிய கிராமங்களில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது 18 பேர் இறந்தனர். இதில் பெரும்பாலான ஓடை பகுதிகள், வாய்க்கால்கள் வழிபாதைகள் தடம் தெரியாமல் அழிந்தன. அப்போது, மழையால் பாதித்த பொதுமக்களை அருகில் ஒரு ஷெட் அமைத்து அதில் தங்க வைத்தனர். இதில் பெரியகாட்டுப்பாளையம் வழியாக செல்லும் மேலிருப்பு வெள்ளவாரி ஓடை உள்ளது. இந்த ஓடை வழியாக 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்றுவர வேண்டும். இந்த ஓடை அடிக்கடி பழுது ஏற்பட்டு சீரமைக்க முடியாமல் போனது. இதன் காரணமாக பண்ருட்டி நெடுஞ்சாலைத்துறையினர் நிரந்தர வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.72 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து பாலம் அமைக்க டெண்டர் விடப்பட்டது.

 இந்த பணிகள் ஆரம்ப கட்டத்திலேயே இருந்தது. முழுமையான பணிகள் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது, கனமழை பெய்ததால் மேலிருப்பு வெள்ளவாரி ஓடைக்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட தரைப் பாலம் அடித்து சென்றது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் கிராம மக்களின் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் இப்பகுதியில் மழைக்கு பாதிப்பை ஏற்படுத்தி மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே இனிவரும் காலத்தில் விரைந்து பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: