வரி செலுத்தாமல் இயக்கிய 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்: உரிமையாளருக்கு ₹2 லட்சம் அபராதம்

நாமக்கல்: நாமக்கல்லில் வரி செலுத்தாமல் இயக்கிய 2 ஆம்னி பஸ்கள் நேற்று  பறிமுதல் செய்யப்பட்டது. உரிமையாளருக்கு ₹2 லட்சம் அபராதம்  விதிக்கப்பட்டது.நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன்,  முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், சரவணன், உமாமகேஸ்வரி  ஆகியோர் நேற்று கீரம்பூர் டோல்கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதிவேகமாக  இயக்கிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசுக்கு  சாலைவரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்களை மோட்டார் வாகன ஆய்வாளர்கள்  பறிமுதல் செய்தனர்.

அந்த இரண்டு வாகனமும் கடந்த 3 மாதமாக சாலை வரி  செலுத்தாமல் இயக்கி வருவது தெரியவந்தது.இதையடுத்து அந்த பஸ்களின்  உரிமையாளருக்கு ₹2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து வட்டார  போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், ‘ஆம்னி பஸ்களில் வரும் 8ம் தேதி வரை  தொடர்ந்து சோதனை செய்யப்படும். பயணிகளிடம் விசாரணை செய்து அதிகப்படியான  கட்டணம் வசூல் செய்தது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி  பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூல் செய்யும் பஸ் உரிமையாளர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: