×

ஆப்கனை எளிதாக வென்றது இந்தியா

அபுதாபி: உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் (பிரிவு 2), ராகுல் - ரோகித் மற்றும் பன்ட் - ஹர்திக் ஜோடிகளின் அதிரடியால் இந்தியா 210 ரன் குவித்து, ஆப்கானிஸ்தானை 66 ரன் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசியது. ராகுல், ரோகித் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக ஆடிய ரோகித் 37 பந்திலும், ராகுல் 35 பந்திலும் அரை சதம் அடித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 14.3 ஓவரில் 140 ரன் சேர்த்தனர். ரோகித் 74 ரன் (47 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஜனத் பந்துவீச்சில் நபி வசம் பிடிபட்டார்.

ராகுல் 69 ரன் (48 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி குல்பாதின் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கடைசி கட்டத்தில் பன்ட், ஹர்திக் அதிரடி காட்ட, இந்தியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்தது. பன்ட் 27 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) , ஹர்திக் 35 ரன்னுடன் (13 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 20 ஓவரில் 211 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் எளிதில் தோல்வியை ஒப்புக் கொண்டது. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 144  ரன் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக கரிம் ஜனத் ஆட்டமிழக்காமல் 42 ரன்னும், கேப்டன் நபி 35 ரன்னும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி 3 விக்கெட் (4 ஓவர், 33 ரன்), அஷ்வின் 2 விக்கெட் (4 ஓவர், 14 ரன்), பும்ரா, ஜடேஜா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

Tags : Afkon ,India , India easily defeated Afghanistan
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...