×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கவர்னர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: தமிழ்நாடு மற்றும் நம் தாய்திருநாட்டின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய மற்றும் பசுமை தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தீபாவளி, நம் அனைவரின் வாழ்வில் அமைதியையும், ஒற்றுமையையும், வளமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கட்டும்.

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி (ஒருங்கிணைப்பாளர், இணை
ஒருங்கிணைப்பாளர்): தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் இந்த தீபாவளித் திருநாளில் மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): மகிழ்ச்சிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்லவை அனைத்தும் மத்தாப்பின் வண்ணங்களாய் நிறைய தீபஒளித் திருநாள் வகை செய்ய வாழ்த்துகிறேன்.

காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்): தீபாவளி கொண்டாடும் இந்து சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது. வாழ்க இந்தியத் திருநாடு, வளர்க மானிட நேயம் எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்): தீமை மறைந்து நன்மை பெருகும் என்ற நம்பிக்கையோடு தான் ஏழை, எளிய மக்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள். அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாமல், நாட்டை சூழ்ந்துள்ள தீமைகளை நாம் ஒன்று சேர்ந்து வெல்வோம் என இந்த நன்னாளில் சபதம் ஏற்போம்.

திருநாவுக்கரசர் (முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்): அறியாமை, வறுமை, தீமை தீவிரவாதம் மற்றும் வன்முறை இருள் அகன்று அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட மனமார வாழ்த்துகிறேன்.
அண்ணாமலை (தமிழக பாஜக தலைவர்): தமிழக மக்களுக்கு பாஜ கட்சியின் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்தியத் திருநாட்டின் எல்லைகளில் நமக்காகப் போராடும் ராணுவ வீரர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): தீபாவளி பண்டிகையை இந்தியா முழுவதும் தீப ஒளியேற்றி அனைவராலும் கொண்டாடப்படுகிறது. கொரோனாவிற்குப் பிறகு ஒளிமயமான எதிர்காலத்தை இந்திய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைப்பதற்கான நல்ல சூழலை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த, அனைத்து தரப்பு மக்களின் வாழ்கைத் தரம் உயர, தீபாவளி திருநாளில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்தக் கூடிய தீபாவளியாக இந்த தீபாவளியின் தொடக்கம் அமையட்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

அன்புமணி (பாமக இளைஞர் அணி தலைவர்): மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும், போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி  தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டிடிவி தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): தீமைகள் அனைத்தும் விலகி, தர்மம் செழிக்க வேண்டும். தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம் புதிய வெற்றிகளுக்கான பாதைகளை உருவாக்கட்டும்.

சரத்குமார் (சமக தலைவர்): இனிய தீப ஒளித்திருநாள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை வழங்கட்டும். சமத்துவத்திலும், சமூகநீதியிலும், சமதர்மத்திலும், சமுதாயங்களுக்கிடையிலான சுமூக நல்லுறவு உள்ளங்களால் ஒன்றுபடட்டும். அனைவரது வாழ்வின் சிக்கல்களும், தீமைகளும் அகன்று, நன்மைகள் சிறக்கும் நன்னாளாய் அமையட்டும். தீபஒளித்திருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் மக்களுக்கு இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் டாக்டர் வி.ஜி.சந்தோசம், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க குலாலர் சங்க தலைவர் சேம.நாராயணன், திராவிட மனித சங்கிலி இயக்க தலைவர் செங்கை பத்மநாபன், அகில இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன தலைவர் ஹென்றி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : Governor ,Deepavali , Congratulations to the Governor and political party leaders on the eve of Deepavali
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...