ராகுல் - ரோகித் அதிரடி இந்தியா 210 ரன் குவிப்பு

அபுதாபி: ஆப்கானிஸ்தான் அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் (பிரிவு 2), ராகுல் - ரோகித் மற்றும் பன்ட் - ஹர்திக் ஜோடிகளின் அதிரடியால் இந்தியா 210 ரன் குவித்தது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசியது. இந்திய அணியில் இஷான் கிஷன், வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக சூரியகுமார், அஷ்வின் இடம் பெற்றனர். ராகுல், ரோகித் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் அவ்வப்போது பவுண்டரி, சிக்சர் விளாசி ஸ்கோர் சீரான வேகத்தில் உயர வழிவகுத்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் விழி பிதுங்கினர்.

ரோகித் 37 பந்திலும், ராகுல் 35 பந்திலும் அரை சதம் அடித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 14.3 ஓவரில் 140 ரன் சேர்த்தனர். ரோகித் 74 ரன் (47 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஜனத் பந்துவீச்சில் நபி வசம் பிடிபட்டார். ராகுல் 69 ரன் (48 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி குல்பாதின் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கடைசி கட்டத்தில் பன்ட், ஹர்திக் அதிரடி காட்ட, இந்தியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்தது. பன்ட் 27 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) , ஹர்திக் 35 ரன்னுடன் (13 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 20 ஓவரில் 211 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது.

* பயிற்சியாளராக டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் (48 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடக்க உள்ள டி20 தொடரில் இருந்து அவர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று செயல்படுவார் என பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது.

Related Stories:

More