×

93 ரன் விளாசினார் கப்தில் ஸ்காட்லாந்துக்கு எதிராக போராடி வென்றது நியூசிலாந்து

துபாய்: ஸ்காட்லாந்து அணியுடனான ஐசிசி உலக கோப்பை டி20 சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் (2வது பிரிவு), நியூசிலாந்து அணி 16 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. துபாயில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஸ்காட்லாந்து முதலில் பந்துவீசியது. கப்தில், டேரில் மிட்செல் இணைந்து நியூசிலாந்து இன்னிங்சை தொடங்கினர். மிட்செல் (13 ரன்), கேப்டன் வில்லியம்சன் (0) இருவரும் ஷரிப் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். கான்வே 1 ரன் மட்டுமே எடுக்க, நியூசிலாந்து 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், கப்தில் - பிலிப்ஸ் 4வது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்தனர். பிலிப்ஸ் 33 ரன் (37 பந்து, 1 சிக்சர்), கப்தில் 93 ரன் (56 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது. நீஷம் 10 ரன், சான்ட்னர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. கோயட்சர் 17 ரன், முன்சி 22 ரன் (18 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெளியேறினர். மில்னி வீசிய 6வது ஓவரில் கிராஸ் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விளாசி நியூசி. வீரர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தார். கிராஸ் 27 ரன் (29 பந்து, 5 பவுண்டரி), மெக்லியாட் 12, பெர்ரிங்டன் 20 ரன்னில் அவுட்டாகினர்.

106 ரன்னுக்கு 5 விக்கெட் சரிந்ததால் ஸ்காட்லாந்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், கடைசி கட்டத்தில் மைக்கேல் லீஸ்க் அதிரடி காட்ட... ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மில்னி வீசிய கடைசி ஓவரில் 26 ரன் தேவைப்பட்ட நிலையில், ஸ்காட்லாந்து வீரர்களால் 9 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்காட்லாந்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்து, 16 ரன் வித்தியாசத்தில் தோற்றது. லீஸ்க் 42 ரன் (20 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), கிரீவ்ஸ் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் போல்ட், சோதி தலா 2, சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர். கப்தில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


Tags : New Zealand ,Scotland ,Cup , New Zealand beat Scotland by 93 runs in the Cup
× RELATED உலக கோப்பை டி20 நியூசி. அணி அறிவிப்பு