குழந்தைகளுக்கு தீபாவளி டிரஸ் கேட்டதால் தகராறு உருட்டுக்கட்டையால் தலையில் அடித்து மனைவி படுகொலை: போதை கணவர் வெறிச்செயல்; ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே குழந்தைகளுக்கு தீபாவளி டிரஸ் ஏன் எடுத்துக் கொடுக்க வில்லை என போதை கணவரிடம் தகராறு செய்த மனைவி, உருட்டுக் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவளூர்குப்பம், தாமம், கிறிஸ்தவ கண்டிகை, நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (42). கீவளூர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தூய்மைப்பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குமாரி (37). மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு கீவ்தி, கிரேசி என்ற இரண்டு மகள்கள். கீவ்திக்கு திருமணமாகி வளர்புரத்தில் வசித்து வருகிறாள்.

வெங்கடேசன், குமாரி, கிரேசி ஆகியோர் கிறிஸ்தவ கண்டிகை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களில்,  கிரேசியும் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு  வெங்கடேசன் குடித்துவிட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது, மனைவி குமாரி, இதேபோல் தினமும் மது அருந்திவிட்டு சம்பாதிக்கிற காசை செலவழிக்கிறீர்களே. தீபாவளிக்கு 2 பசங்களுக்கும் டிரஸ் எடுக்கவில்லையே என கேட்டு சண்டை போட்டுள்ளார். இருவருக்கும் வாய்த்தகராறு முற்றி கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், குமாரி வீட்டிற்கு வெளியே வந்து படுத்துள்ளார்.

இந்நிலையில் அதிகாலை 2.30 மணி அளவில் வெளியே வந்த வெங்கடேசன், படுத்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி குமாரியை உருட்டுக்கட்டையால் தலையில் சரமாரியாக அடித்து உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். படுகாயம் அடைந்த குமாரி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே,  வீட்டிற்குள் புகுந்து வெங்கடேசன் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குமாரியின் உடலை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: