×

தமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்!

நன்றி குங்குமம் தோழி

கடந்த 2017ம் ஆண்டில் பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை முதன் முதலில் போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் முதன்மை திட்ட மேலாளராக பொள்ளாச்சியை சேர்ந்த சம்யுக்தா விஜயன் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளவர் அன்பு ரூபி. இப்போது தமிழ்நாட்டின் முதல் திருநங்கை நர்ஸாக அன்பு ரூபி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருநங்கைகள் என்றால் முகம் சுழிக்க வேண்டிய அவசியம் இருக்காது. திருநங்கைகள் என்றாலே ரயிலிலோ அல்லது கடைகளில் கைத்தட்டி பிச்சை எடுப்பவர்கள் என்ற எண்ணம் இனி வரும் நாட்களில் சுத்தமாக மறைந்துவிடும். இதற்கு உதாரணமாக அன்பு ரூபி 25 வயதில் அரசு மருத்துவமனையில் நர்சாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சேர்வைகாரன் மடத்தை சேர்ந்த பார்வையற்றவரான ரத்ன பாண்டி - தேன்மொழி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் அன்பு ராஜ். காலங்கள் கடந்த போது இவரிடம் பெண் தன்மை மேலோங்கியது. இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.

ஆனால், அவரது தாய் தேன்மொழி திருநங்கையான அன்பு ராஜ்க்கு உறுதுணையாக இருந்தார். இதையடுத்து அன்பு ராஜ் என்ற தன் பெயரை அன்பு ரூபி என பெயரை மாற்றிக்கொண்டார். அதே சமயம் பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் உறவினர்களின் கேலிப் பேச்சுக்களை பற்றி ரூபி சிறிதும் கவலைப்படவில்லை. பள்ளிக்கு சென்று படித்தார். கிண்டல் கேலிக்கு பயந்து வீட்டில் ஒடுங்கிவிடாமல், விடாமுயற்சியுடன் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன் பின் நெல்லையில் உள்ள நர்சிங் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பிற்கு வாய்ப்பு கிடைத்தது.

 நர்சிங் துறையில் சேர்ந்து படித்தார். கடைசியாண்டு படிப்பை முடிக்கும் போது, ரூபியின் தந்தை காலமானார். அதனால் குடும்ப பொறுப்பு ரூபியின் மேல் விழுந்தது. படிப்பை முடித்து மூன்றரை ஆண்டுகள் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றினார். தற்போது இவருக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணிக்கான வாய்ப்பு கிடைத்தது.

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை ரூபி பெற்றுள்ளார். இவரின் முயற்சி மற்றும் உழைப்பை பாராட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த டிசம்பர் 2ம் தேதி ரூபியின் சொந்த ஊரிலேயே அவருக்கு செவிலியர் பணி வழங்கி கவுரவித்துள்ளார்.

இது குறித்து தாய் தேன்மொழி கூறுகையில், ‘‘மாற்றுப்பாலினத்தவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. மகன் மகளாக மாறியது முன்பு மனம் வலித்தாலும் தற்போது அவள்தான் எங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறாள். அவளின் வெற்றியை கண்டு நான் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபக்கம் மிகவும் பெருமையாக உணர்கிறேன்’’ என்றார்.

அரசு பணி பெற்ற அன்பு ரூபி `திருநங்கைகள் பலருக்கு உடல்ரீதியான பிரச்னை உள்ளதை அறிந்தே நான் நர்சிங் பயிற்சி பெற்றேன். மேலும் சிகிச்சை பெற வசதியில்லாத ஏழைகள் உடல் பிரச்னைக்கு தீர்வு காண உதவுவேன்’ என்றார்.

கோமதி பாஸ்கரன்

Tags : nurse ,Tamil Nadu ,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...