கைரேகை மாயமானது எப்படி? நீட் ஓஎம்ஆர் விடைத்தாளில் மோசடி நடந்துள்ளதாக வழக்கு: தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவு

மதுரை: நீட் ஓஎம்ஆர் விடைத்தாளில் மோசடி நடந்திருக்கலாம் என தொடரப்பட்ட வழக்கில் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், கடையத்தைச் சேர்ந்த முப்பிடாதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 2020ல் பிளஸ் 2 முடித்தபிறகு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் கலந்து ெகாண்டேன். 540 மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தேன். முதலில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாளின்படி இந்த மதிப்பெண் உறுதியானது. ஆனால், 3 நாட்களுக்கு பிறகு வேறொரு ஓஎம்ஆர் விடைத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதன்படி எனக்கு குறைந்த மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. இதனால் எனக்கான வாய்ப்பு பறிபோனது. பல மனுக்கள் அளித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. தற்போது பிஎஸ்சி சேர்ந்து படித்து வருகிறேன். கடந்த செப். 12ல் நடந்த நீட் தேர்விலும் பங்கேற்றேன். தேர்வின்போது தேர்வறை கண்காணிப்பாளர் முன்னிலையில் ஓஎம்ஆர் விடைத்தாளில் கைரேகை பதிவு செய்திருந்தேன். அக். 15ல் ஓஎம்ஆர் விடைத்தாள் பதிவேற்றப்பட்டது. அதில், எனது கைரேகை இல்லை. நான் விடையளிக்காத சில வினாக்களுக்கு விடையளிக்கப்பட்டிருந்தது.

நீட் விடைத்தாளில் பெருமளவு முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, எனது ஓஎம்ஆர் விடைத்தாளை வழங்கவும், எனது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்யவும், எனக்காக எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தேசிய தேர்வு முகமை, மருத்துவ கல்வி இயக்குநரக தேர்வுக்குழு ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Related Stories: