திருப்பூரில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டிடம் மண்ணுக்குள் புதைந்தது: குளத்தை ஆக்கிரமித்ததாக பொதுமக்கள் புகார்

திருப்பூர்:  திருப்பூரில் அதிமுக ஆட்சிகாலத்தில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக புகார் எழுந்த கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டிடம் மண்ணில் புதைந்தது. இதையடுத்து கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. திருப்பூர்  மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள குளம் அருகில் கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசின் சார்பில் ரூ. 94 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி நடந்தது. 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது.

மீதமுள்ள பணிகள் நடைபெற்று வந்தது. இந்த கட்டிடம் ஓடைக்கு சொந்தமான ஓடை புறம்போக்கில் கட்டப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த கட்டிடம் பல இடங்களில் விரிசல் விட்டும், கட்டிடத்தின் ஒரு பகுதி மண்ணுக்குள் புதைந்தும் உள்ளது. அங்கு நேற்று மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு அரசு துறை அதிகாரிகள்,  மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி அளித்த பேட்டியில், இந்த  கட்டிடத்தில் தற்பொழுது விரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வு ஏற்படுத்துவோம். தேவைப்பட்டால் மண் பரிசோதனை செய்வோம் என்றார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கட்டிடப்பொறியாளர்கள் நேற்று இரவு ஆய்வுக்குப்பின் மண்ணில் புதைந்த கட்டிடத்தை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு இடிக்கும் பணி தொடங்கியது.

Related Stories:

More