×

தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக புகார் பொதுப்பணித்துறை பெண் அதிகாரி வீடுகளில் ரூ.2.27 கோடி பறிமுதல்: 38 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளியும் சிக்கியது; வேலூர், ஓசூரில் விஜிலன்ஸ் போலீசார் ரெய்டு

வேலூர்: வேலூரில் தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை பெண் செயற்பொறியாளரின் வேலூர், ஓசூர் வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில், ரூ.2 கோடியே 27 லட்சத்து 75 ஆயிரத்து 300 மற்றும் 38 பவுன் நகைகள், 1 கிலோ 320 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் வேலூர் மண்டல தொழில்நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதன் கீழ் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்கள் உள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் என அனைத்து அரசு கல்லூரிகளின் கட்டிட கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அலுவலகத்தின் செயற்பொறியாளராக ஷோபனா(57) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தீபாவளி பண்டிகையையொட்டி கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூல் செய்து வருவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.

அதன்பேரில் வேலூர் விஜிலென்ஸ் டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினி, விஜயலட்சுமி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் செயற்பொறியாளர் ஷோபனாவை கண்காணிக்க தொடங்கினர். அப்போது வேலூர் தொரப்பாடி- அரியூர் சாலையில் உள்ள ரெஸ்ட்டாரன்ட் வெளியே அரசு காரில் சென்று கொண்டிருந்த அவரை திடீரென விஜிலென்ஸ் போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரில் ₹5 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் பணம் தன்னுடையது இல்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

உடனடியாக மாவட்ட ஆய்வுக்குழு துணை அலுவலர் முருகன் அளித்த புகாரின்பேரில், விஜிலென்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ஷோபனா தங்கியிருந்த வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அங்கு கணக்கில் காட்டப்படாத ரூ.15.85 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.3.92 லட்சம் மதிப்பிலான மூன்று காசோலைகள், 18 ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஷோபாவின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேருநகர்-2வது குறுக்குத் தெருவில் உள்ள அவரது வீட்டில் கிருஷ்ணகிரி மாவட்ட விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அப்போது, வீட்டின் பல்வேறு இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தொடர்ந்து தீவிர சோதனை நடத்தியதில் நேற்று மாலை வரை ரூ.2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரொக்கப்பணம் மற்றும் 38 சவரன் தங்க நகைகள், 1 கிலோ 320 கிராம் வெள்ளி, ரூ.27 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள நிரந்தர வைப்பு சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர 11 வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் வங்கி லாக்கர் சாவி ஆகியவை பறிமுதல் செய்ப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கி லாக்கர்களில் விஜிலென்ஸ் போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் ஷோபனாவின் உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயர்களில் சொத்துகள் குவிக்கப்பட்டுள்ளதா என விசாரணை தொடங்கியுள்ளது. அதேபோல் ரூ.3.92 லட்சம் மதிப்பிலான வங்கி காசோலைகள் வழங்கியவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெண் அதிகாரி வீட்டில் நடந்த ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* பாத்ரூமிலும் பணம் பதுக்கல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள நேரு நகர் 2வது கிராசில் உள்ள ஷோபனா வீட்டில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் 2 மணி அளவில் நிறைவடைந்தது. இந்த 6 மணி நேர சோதனையில் வீட்டிலில் கட்டில், பீரோ, சமையல் அறை, பாத்ரூம் உள்பட பல இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

* சேலத்தில் இந்து அறநிலையத்துறையிலும் வசூல்
வேலூர் மண்டல தொழில்நுட்ப கல்வி கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா கடந்த 2019 முதல் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு சேலத்தில் இந்து சமய அறநிலைத்துறையில் அயல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அங்கேயும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அங்கிருந்து இடமாறுதல் பெற்று வேலூருக்கு வந்துள்ளார். அவரது கணவர் தனியார் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் பணியை தொடங்கியது முதலே லஞ்சம் வாங்கி குவித்து இருப்பது விஜிலென்ஸ் போலீசாரையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

* பாதிக்குமேல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
செயற்பொறியாளர் ஷோபனாவின் ஓசூர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. பிளாஸ்டிக் கவர்களில் வைத்து பணம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதில் பாதிக்கு மேல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்தது. இந்த 2 ஆயிரம் நோட்டுக்கள் தற்போது பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை. இந்நிலையில் லஞ்சமாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்கி வீடுகளில் பதுக்கி வைத்திருப்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* தொடரும் ரெய்டிலும் அடங்காத அதிகாரிகள்
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 18 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக ஆவின், ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, உள்ளாட்சி தணிக்கை, நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சிகள், வணிக வரித்துறை, வட்டார போக்குவரத்து செக்போஸ்ட், திருவள்ளுவர் பல்கலைக்ககழம் ஆகிய துறைகளின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ரெய்டு நடத்தி வரும் நிலையிலும், அதிகாரிகள் தீபாவளி வசூல் வேட்டையை நிறுத்தவில்லை. ஏற்கனவே கடந்த ஆண்டு வேலூரில் மண்டல மாசுகட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.3.25 கோடி ரொக்கப்பணம், 3 கிலோ தங்கம், ஆறரை கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Diwali ,Vigilanz ,Vallur, Ozur , Rs 2.27 crore confiscated from the houses of a female public servant who was allegedly involved in a Diwali collection hunt: 38 pounds of jewelery and 1 kg of silver were seized; Vigilance police raid in Vellore, Hosur
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...