×

டெல்டாவில் வெளுத்து கொட்டுகிறது மழை: 1 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் மூழ்கியது

திருச்சி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன்  மழை பெய்து வருகிறது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர்,  அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நேற்றிரவு விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இன்றும் அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாகை, வேதாரண்யம் பகுதிகளில் 6 ஆயிரம் பைபர், 1000 விசை படகுகள் கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சை, புதுக்கோட்டையிலும் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.   தொடர்ந்து பெய்து வரும் மழையால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 2ம் போக சாகுபடியான சம்பா நடவு மற்றும் தாளடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கர் சம்பா மழை நீரில் மூழ்கி உள்ளது. வயல்கள் குளம் போல் காட்சி அளிக்கிறது. விளை நிலங்களில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்படுவதால், கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள அன்னமரசனார், வடக்கு மற்றும் தெற்கு பனையனார் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.  திருவாரூர் அருகே  உக்கடையில் உள்ள வெட்டாறு கரை நேற்று இரவு 10 அடி நீளத்துக்கு உடைந்தது. ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்வதால் அருகில் உள்ள வயல்களுக்குள் தண்ணீர் பாயவில்லை. அதற்கு மாற்றாக உடைப்பு வழியாக வயல்களில் தேங்கியிருந்த மழைநீர், வெட்டாற்றில் வடிந்தது.  பொதுப்பணித்துறை, வருவாய், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அங்கு சென்று கரை உடைப்பை தற்காலிகமாக சரி செய்தனர்.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் 2வது வீதியில் பாண்டியன்(63) என்பவரின்  பழமையான வீட்டின் மேல் பகுதி மழைநீரால் ஊறியிருந்தது. இந்நிலையில்  ஹாலின் மேல் தளம் இடிந்து விழுந்தது. இதில் பாண்டியன், இவரது மகன்  அசோக்குமார்(37) ஆகியோர் காயமடைந்தனர்.    மழை காரணமாக திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், காரைக்கால் மாவட்டங்கள் உள்பட 20 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டனர்.

லப்பைகுடிக்காட்டில் அதிகம்
டெல்டாவில் இன்று காலை 6 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு(மிமீ):   திருவாரூர் 78.2, நன்னிலம் 66.2, குடவாசல் 51.4, வலங்கைமான் 31.4, மன்னார்குடி 40, நீடாமங்கலம் 38.4, பாண்டவையாறு தலைப்பு 50.4, முத்துப்பேட்டை 30.2, திருத்துறைப்பூண்டி 34, லப்பைகுடிக்காடு 110, அகரம் சீகூர் 98, எறையூர் 104, வேப்பந்தட்டை 69, வி.களத்தூர் 63, கரூர் மாவட்டத்தில் பஞ்சப்பட்டி 75, கரூர் 11, அணைபாளையம் 56, தோகைமலை 40, கிருஷ்ணராயபுரம் 40,  மாயனூர் 35, மைலம்பட்டி 57, அரவக்குறிச்சி 29, மயிலாடுதுறை மாவட்டம்  மணல்மேடு 101, மயிலாடுதுறை 64, சீர்காழி 57.6, கொள்ளிடம் 57.8.

டெல்டாவில் கனமழை எச்சரிக்கை
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை  மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த  மாவட்டங்களுக்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுதவிர  இன்றும், நாளையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம், சேலம், டெல்டா மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tags : Delta , Delta, rain, samba crop
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!