×

இத்தாலி, ஸ்காட்லாந்து சுற்றுப்பயணம் நிறைவு: இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

புதுடெல்லி:காலநிலை மாநாடு, ஜி-20 மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்து சென்ற பிரதமர் மோடி தனது ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பினார்.இத்தாலியின் ரோம் நகரில் ஜி-20 உச்சி மாநாடு மற்றும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக 5 நாள் பயணமாக பிரதமர் மோடி வௌிநாடுகளுக்கு சென்றார். இத்தாலி மாநாட்டை முடித்து கொண்டு கிளாஸ்கோ மாநாட்டில் நேற்று மீண்டும் உரையாற்றிய பிரதமர், ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொடரமைப்பு திட்டத்தை கொண்டு வரவேண்டும். இதன்மூலம், சூரிய மின்சக்தியை அனைவரும் பயன்படுத்தமுடியும். உலகம் முழுவதும் எங்கெல்லாம் மின் உற்பத்தி செய்ய முடியும் என்பதை கணக்கீடு செய்யும் முறையை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ வழங்கும்’ என்றார்.

இந்தியா திரும்புவதற்கு முன்பு பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டரில், ‘பாரிஸ் ஒப்பந்தம் மட்டுமல்ல; காலநிலை மாற்றம் தொடர்பாக அடுத்த 50 ஆண்டுகளுக்கு நிறைவேற்ற பணிகளை இலக்காக நிர்ணயித்துள்ளது’ என்று கூறியுள்ளார். கிளாஸ்கோ நகரில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடிய மோடி, குழந்தைகள் வரைந்த ஓவியங்களில் கையெழுத்திட்டு வாழ்த்தினார். மேலும், அங்கிருந்த கலைஞர்களுடன் இணைந்து ‘டிரம்ஸ்’ வாசித்து அவர்களை மகிழ்வித்தார். பல நாட்டு தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உடனும் ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில், இன்று காலை 8 மணிவாக்கில் டெல்லி வந்திறங்கிய பிரதமர் மோடி, தொடர்ந்து மதியம் 12 மணியளவில் கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தினார்.



Tags : Italy, ,Scotland ,PM Modi ,India , பிரதமர் மோடி
× RELATED ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி..!!