×

ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக 12 லட்சம் மோசடி; சிக்கினார் ஊழியர்

ஆவடி: தென்னக ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக 12 லட்ச ரூபாய் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். ஆவடி மேற்கு காந்தி நகர் பெரியார் 8வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (54). இவர் ஆவடி சிடிஎச் சாலையில் உள்ள பிரபல தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிவருகின்றார். இவருக்கும் அம்பத்தூர், கள்ளிக்குப்பம், கிழக்கு பாலாஜி நகர் 9வது தெருவில் வசித்துவரும் வெங்கடேசன் (46) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே அலுவலகத்தில் வெங்கடேசன் பணியாற்றி வருகின்றார். இதை பயன்படுத்தி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுரேஷ்குமார், தனது மகள் நந்தினி பிரியாவுக்கும் மைத்துனர்  ராமுலுவின் மனைவி சாய்பிரியாவுக்கும் தென்னக ரயில்வேயில் வேலை வாங்கித் தரும்படி வெங்கடேசனை அணுகியுள்ளார். பின்னர் இரண்டு விண்ணப்ப படிவங்களில் கையெழுத்து பெற்றதுடன் வேலைக்காக தலா 6 லட்சம் வீதம் 12 லட்ச ரூபாய் வெங்கடேசன் வாங்கியுள்ளார்.

ஆனால் கடந்த 3 வருடங்களுக்கு மேலாகியும் வேலை வாங்கிகொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால் சுரேஷ்குமார் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது கொடுக்க மறுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி சுரேஷ்குமார் கொடுத்துள்ள புகாரின்படி, அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து இன்று காலை வெங்கடேசனை கைது செய்தார். இதுபோல் வேறிடத்தில் கைவரிசை காட்டியுள்ளாரா என்று விசாரிக்கின்றனர்.

Tags : Railways, fraud, employee
× RELATED காதல் திருமணம் செய்த நர்சை கடத்த முயன்ற உறவினர்கள்