×

வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தீபாவளி பாதுகாப்பு பணியில் 1,000 தீயணைப்பு வீரர்கள்-வடமேற்கு மண்டல துணை இயக்குனர் தகவல்

வேலூர் : வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையொட்டி ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளதாக வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் தெரிவித்தார்.தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை, பலகாரம் இவைகள் தான் முக்கிய பங்கு வகிக்கும். தீபாவளி அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். அவ்வாறு பட்டாசு வெடிக்கும்போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் தீபாவளியின்போது, பட்டாசு விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்வது, காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை தொடர்பாக தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து வேலூர் தீயணைப்பு வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் கூறியதாவது:

வடமேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளுர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில், 48 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி, இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு பணிக்கு, 24 மணி நேரமும், ஆயிரம் தீயணைக்கும் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் பொதுஇடங்கள், கலெக்டர் அலுவலகம், மார்க்கெட், பெரிய பட்டாசு கடைகளின் அருகில், ஒரு தீயணைக்கும் வாகனத்துடன், 24 மணி நேரமும் தீயணைக்கும் துறையினர் பணியில் இருப்பர். இன்று(3ம் தேதி) முதல் நாளை வரை இது செயல்பாட்டில் இருக்கும். ஆங்காங்கே தீயணைக்கும் வீரர்கள் அடங்கிய குழுவினர் விழிப்புணர்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகையின்போது அதிகளவில் தீ விபத்து நடந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதியோர், நோயுற்றவர்கள் மற்றும் மருத்துவமனை அருகே பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. அரசு அறிவித்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்கக்கூடாது

பட்டாசுகளை திறந்தவெளியில் வைத்து வெடிக்க வேண்டும். பட்டாசுகளை மூடிய கலனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது. குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிப்பதை அனுமதிக்கக்கூடாது. பட்டாசு வெடிக்கும் போது அருகாமையில் தண்ணீர் வைத்திருக்க  வேண்டும். சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். காலில் செருப்பு அணிந்திருக்க வேண்டும், வெற்றுக்கைகளால் பட்டாசு கொளுத்தக்கூடாது. பட்டாசு வெடித்தபின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். முழுவதும் வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும். மின் கம்பங்கள் அருகே பட்டாசுகளை வீசக்கூடாது என்று தீயணைப்பு துறை அறிவுறுத்தி உள்ளது.

தீக்காயசிகிச்சைக்கு ஏற்பாடு

தீபாவளி தினத்தன்று மாவட்ட மருத்துவமனைகள், மாவட்ட துணை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் தீக்காய சிகிச்சைக்கு தேவையான வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பெரும் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் பொது சுகாதாரத்துறை அவசர கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags : Deepavali ,Vellore ,Thiruvannamalai ,North , Vellore: Thousands of firefighters will be deployed in 7 districts including Vellore, Thiruvannamalai, Tirupati and Ranipettai on the occasion of Diwali.
× RELATED சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே...