×

தமிழகம் முழுவதும் பரவலாக மழை: தீபாவளியை முன்னிட்டு புத்தாடை, பொருட்களை வாங்க சென்ற மக்கள் அவதி

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் தீபாவளி விற்பனையை நம்பி இருந்த சாலையோர வியாபாரிகள் கடும் பாதிப்பிற்கு ஆளாகினர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குமரி கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்றும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு பரவலாக மழை பெய்த நிலையில் இரவில் இடைவிடாமல் கனமழை கொட்டியது. குறிப்பாக புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

நாகை மாவட்டம் நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டியது. மழையால் தீபாவளிக்காக புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வந்த மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல மதுரை மாவட்ட மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் தீபாவளி விற்பனையை நம்பி சாலையோரம் கடை வைத்திருந்த வியாபாரிகள் அவதிக்கு ஆளாகினர். குமரி மாவட்டத்தில் நேற்று மீண்டும் மழை வெளுத்து வாங்கியது. நாகர்கோவில் தங்கம்புதூர், இளங்கடை, ராஜங்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5வது நாளாக நேற்று இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது. மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதேபோல சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை தொடர்ந்ததால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சாலையோர வியாபாரிகள் பாதிப்பிற்கு ஆளாகினர். திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஆரணியை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன.

Tags : Tamil Nadu ,New Year's Eve ,Diwali , Rain, Diwali
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...