×

நமீபியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அபார வெற்றி

அபுதாபி: நபீபியா அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் (2வது பிரிவு), பாகிஸ்தான் அணி 45 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆஸம் இருவரும் பாகிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் 10 ஓவரில் 59 ரன் மட்டுமே சேர்த்தது.  பாபர் 39 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 70 ரன் (49 பந்து, 7 பவுண்டரி) விளாசி வீஸ் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த ஸமான் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரிஸ்வானுடன் முகமது ஹபீஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நமீபியா பந்துவீச்சை பதம் பார்க்க, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஜேஜே ஸ்மிட் வீசிய கடைசி ஓவரில் 4 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 24 ரன் விளாசி மிரட்டினார்.

பாகிஸ்தான் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. ரிஸ்வான் 79 ரன் (50 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), ஹபீஸ் 32 ரன்னுடன் (16 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய நமீபியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து, 45 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டேவிட் அதிகபட்சமாக 43 ரன் (31 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். கிரெய்க் வில்லியம்ஸ் 40 ரன், ஸ்டீபன் பார்ட் 29 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹசன் அலி, இமாத் வாசிம், ஹரிஸ் ரவுப், ஷாதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் (8 புள்ளி), அரையிறுக்கு முன்னேறியது.

Tags : Pakistan ,Namibia , Pakistan's huge victory over Namibia
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி