குறைந்த விலைக்கு தங்ககாசு தருவதாக செய்யாறு தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் பறித்த எஸ்.எஸ்.ஐ: 6 பேர் கும்பல் அதிரடி கைது; 5 லட்சம் டம்மி ரூபாய் சிக்கியது

சேலம்: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பெரும்பாலை விநாயகபுரத்தை சேர்ந்தவர் பழனி (36). தொழிலதிபரான இவர் நகை, ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம், நண்பர் ஒருவர் சேலம் அம்மாபேட்டை காமராஜ்நகரை சேர்ந்த அண்ணாச்சி (எ) பெரியசாமி என்பவர் குறைந்த விலைக்கு தங்ககாசு தருவதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போனில் தொடர்புகொண்டபோது நகை சீட்டுக்காக கிராமுக்கு 300 குறைத்து தங்ககாசு தருவதாக பெரியசாமி கூறியுள்ளார். இதையடுத்து, ரூ.15 லட்சத்துடன் நேற்று முன்தினம் மாலை பழனி, நண்பர் பாஸ்கருடன் காரில் சேலம் சென்றுள்ளார்.

ஓமலூர் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில் ஒரு ஓட்டல் முன்பு காத்திருந்தபோது, பெரியசாமியும், அவரது மகன் ஜெகன், மருமகன் பரணிதரன் ஆகியோர் மற்றொரு காரில் அங்கு வந்தனர். அவர்கள், பழனியிடம் தங்ககாசுகளை காட்டியுள்ளனர். அதில் ஒரு காசை வாங்கி பழனி பரிசோதித்துக் கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 2 பேர் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ எஎ கூறி, பழனியிடமிருந்த ரூ.10 லட்சத்தை பறித்துக்கொண்டு, ஸ்டேஷனுக்கு வரும்படி கூறிவிட்டு புறப்பட்டனர். அதே நேரத்தில், பெரியசாமி, ஜெகன், பரணிதரன் ஆகியோரையும் ஸ்டேஷனுக்கு வரக்கூறி அழைத்தனர். சந்தேகமடைந்த பழனியும், பாஸ்கரும் எஸ்ஐ எனக்கூறியவரை மடக்கினர். உடனே மற்றவர்கள் தப்பிவிட்டனர்.  

பிடிபட்டவருடன் ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பழனி புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் சேலம் ஆதிசக்திபுரத்தை சேர்ந்த உதயசங்கர் (28) என்பதும், இன்ஸ்பெக்டர் என கூறி தப்பியவர், சேலம் இடைப்பாடி சமுத்திரம் பகுதியை சேர்ந்த சரவணன் (49), சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ என்பதும், இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக இருந்ததும், போலி தங்ககாசுகளை கொடுத்து மோசடி செய்யும் கும்பல் என்பதும் தெரிந்தது. இதையடுத்து உதயசங்கர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து தனிப்படையினர் இரவோடு இரவாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சிறப்பு எஸ்ஐ சரவணன் (49), பெரியசாமி (65), அவரது மகன் ஜெகன் (33), மருமகன் பரணிதரன் (26), அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (46) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பரணிதரனை கைது செய்தபோது, அவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காருக்குள் ரூ.5 லட்சம் டம்மி ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதில் சில்ட்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா என எழுதப்பட்டிருந்தது. இவர்கள் வேறு யாரிடமும் மோசடி செய்துள்ளார்களா?, வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு எஸ்.ஐ. சரவணன் கைது செய்யப்பட்டதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோடா உத்தரவிட்டார்.

Related Stories: