குமரிக் கடல் பகுதியில் காற்றழுத்தம் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: குமரிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து இன்று அரபிக் கடல் பகுதிக்கு வரும். அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும். இதையடுத்து, 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 20மிமீ மழை பெய்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுதவிர இன்றும் நாளையும், செங்கல்பட்டு திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம், சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்துக்கான இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நான்கு இடங்களில் மிக கனமழையும், 10 இடங்களில் கனமழையும்,  பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 20 செமீ மழை பெய்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில், பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்யும்.

சில இடங்களில் கனமழை பெய்யும். குமரிக்கடல் பகுதியில் இன்றும், 3, 4 தேதிகளில் தென் கிழக்கு அரபிக் கடல் கேரள கடற்கரை பகுதி, லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று, மணிக்கு 50 கிமீ வேகம் முதல் 60 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். அக்டோபர் மாத மழையை பொறுத்தவரையில் தமிழகம், புதுவையில் பெய்த மழையின் அளவு 23 செமீ, இயல்பு அளவு 18 செமீ. இது இயல்பைவிட 21 சதவீதம் அதிகம். கடந்த 20 ஆண்டுகளை பொறுத்தவரையில் அக்டோபர் மாதம் பெய்த மழையின் அளவை பொறுத்தவரையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த மழை 6வது இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டு பெய்த மழையின் படி பார்த்தால் 18 மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழையும், அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் இயல்பைவிட 113 சதவீதம் பெய்துள்ளது. குறநை்தபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 32 சதவீதம் இயல்பைவிட குறைவாக இருந்தது. சென்னை மாவட்டத்தை பொருத்தவரையில் அக்டோபர் மாதத்தில் 1 முதல் 31 தேதிவரை 22 சதவீதம் குறைவாக மழை பெய்தது. இன்று 7 சதவீதம் அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்துக்கான அறிவிப்பு விரைவில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும். சென்னையில் இடைவெளி விட்டு மழை (தீபாவளியில்) பெய்யும்.

Related Stories: