×

3 எம்பி, 29 எம்எல்ஏ தொகுதிகளுக்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி: ஆளும் இமாச்சலில் பாஜ தோல்வி; கர்நாடகாவிலும் பின்னடைவு; மேற்கு வங்கத்தில் மம்தா அபாரம்

புதுடெல்லி: நாடு முழுவதும் நடந்த 3 மக்களவை மற்றும் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பல மாநிலங்களில் பாஜ தோல்வியைத் தழுவி உள்ளது. குறிப்பாக, பாஜ ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு மக்களவை மற்றும் 3 சட்டப்பேரவை தொகுதிகளையும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் 4 சட்டப்பேரவை தொகுதியையும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றி அசத்தியது. பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளே அமோக வெற்றி பெற்றுள்ளன.

நாடு முழுவதும் 3 மக்களவை மற்றும் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடந்தது. விரைவில் உபி உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டாக இந்த இடைத்தேர்தல் கருதப்படுகிறது. இதனால், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பல மாநிலங்களில் பாஜ அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளது.

பாஜ ஆளும் இமாச்சலப் பிரதேசம், மண்டி மக்களவை தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அம்மாநில மறைந்த முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங், பாஜ சார்பில் போட்டியிட்ட கார்கில் போர் ஹீரோ ஓய்வு பெற்ற பிரிகேடியர் குஷல் தாகூரை 8,766 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதே போல், அம்மாநிலத்தில் நடந்த பதேப்பூர், ஜுப்பல்-கோட்காய், அக்ரி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம், பாஜ 4 தொகுதியிலும் முழுமையாக தோல்வியை சந்தித்துள்ளது. ஆளும் மாநிலத்திலேயே பாஜவின் இந்த படுதோல்வி அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல, மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து போட்டியிட்ட பாஜ 4 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இங்கு வெற்றி பெறுவது மானப்பிரச்னையாக கருதிய பாஜ, 3 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. 4 தொகுதியில் திரிணாமுல் 75.02 சதவீத வாக்குகளையும், பாஜ வெறும் 14.48 சதவீத வாக்கையும் மட்டுமே பெற்றது. இதன் மூலம், மேற்கு வங்கத்தில் மம்தா முழுமையாக பாஜவை அடக்கியிருப்பதை உறுதி செய்துள்ளார். அம்மாநிலத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரசே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள அரியானாவிலும் பாஜவுக்கு தோல்வியே கிடைத்தது. இங்கு, இந்திய தேசிய லோக் தள கட்சியின் (ஐஎன்எல்டி) அபய் சிங் சவுதாலா வெற்றி பெற்றார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது இதே தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர் சவுதாலா. மீண்டும் இவர் வென்றுள்ளார். சமீபத்தில் இம்மாநிலத்தில் நடந்த மற்றொரு இடைத்தேர்தலிலும் பாஜ தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் 2 தொகுதிகளையும் காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டது.

இவற்றில் பாஜ 3, 4வது இடங்களுக்கு பின்னுக்கு தள்ளப்பட்டது. மகாராஷ்டிராவில் டெக்லுர் தனித் தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டது. அங்கும் பாஜ தோல்வி அடைந்தது. கர்நாடகாவில் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்ற நிலையில் அங்கு 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில், சிண்டிகி தொகுதியில் பாஜ வென்ற நிலையில், ஹங்கல் தொகுதியை காங்கிரசிடம் பறிகொடுத்தது. இது புதிய முதல்வர் பொம்மைக்கும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் கந்த்வா மக்களவை தொகுதி மற்றும் 2 சட்டப்பேரவை தொகுதிகளை ஆளும் பாஜ தக்க வைத்துக் கொண்டது. அங்கு ஒரு சட்டப்பேரவை தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது. அசாமில் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 3ல் பாஜவும், அதன் கூட்டணி கட்சியான யுபிபிஎல் கட்சி 2 தொகுதிகளிலும் வென்றன. ஆந்திராவில் பத்வல் தொகுதியை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டது. தெலங்கானாவில் முசுராபாத் சட்டப்பேரவை தொகுதியில் பாஜ வெற்றி பெற்றது. இத்தொகுதி ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியிடம் இருந்தது. வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரையில் பாஜ.வும் அதன் கூட்டணி கட்சிகளும் வென்றுள்ளன. மற்ற மாநிலங்களில் பாஜ அடைந்துள்ள தோல்வியின் எதிரொலி, அடுத்த வரும் சட்டப்பேரவை தேர்தல்களிலும் எதிரொலிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

29பேரவை தொகுதி வெற்றிகள்
பாஜ+    9
காங்கிரஸ்    8
திரிணாமுல்    4
என்பிபி    2
ஐஜத    2
யுடிபி    1
ஐஎன்எல்டி    1
ஒய்எஸ்ஆர் காங்.    1
எம்என்எப்    1

* லாலு கட்சி ஏமாற்றம்
பீகாரில் குஷேஸ்வர் அஸ்தான், தாராபூர் ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிட்டன. 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பீகார் திரும்பிய ஆர்ஜேடி கட்சி தலைவர் லாலு, 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடைசி நாள் பிரசாரத்தில் பங்கேற்றார். ஆனாலும், ஆர்ஜேடி, காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிட்டதால் பலன் அடைந்த ஆளும் ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதியிலும் வென்றது.

* கைவிட்டுப் போச்சு
இடைத்தேர்தல் நடந்த 3 மக்களவை தொகுதிகளும் பாஜ வசம் இருந்தன. தற்போது, அதில் 2 தொகுதிகளை அது இழந்துள்ளது. மபி.யில் மட்டுமே கந்த்வா தொகுதியை தக்க வைத்துள்ளது. தாத்ரா-நாகர் ஹவேலி மக்களவை தொகுதியை பாஜ.விடமிருந்து சிவசேனா கைப்பற்றியது. மகாராஷ்டிராவை தாண்டி முதல் முறையாக வெளி மாநிலத்தில் சிவசேனா வென்று அசத்தி உள்ளது. இமாச்சலில் மண்டி தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.

* தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி
இடைத்தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘காங்கிரசின் ஒவ்வொரு வெற்றியும், எங்கள் கட்சித் தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. வெறுப்புக்கு எதிராக அச்சமின்றி போராடுங்கள்,’ என கூறி உள்ளார்.


Tags : BJP ,Himachal ,Karnataka ,Mamta Aparam ,West Bengal , Opposition wins by-elections to 3 MP, 29 MLA constituencies: BJP loses in ruling Himachal; Setback in Karnataka too; Mamta Aparam in West Bengal
× RELATED பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்ட நடிகை...