ஆப்கானிஸ்தான் அணியில் அஸ்கருக்கு பதிலாக ஷராபுதின் அஷ்ரப்

துபாய்: ஆப்கானிஸ்தான் அணியில் ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கனுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஷராபுதின் அஷ்ரப் சேர்க்கப்பட்டுள்ளார். நடப்பு ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் 2வது பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் போராடி தோற்றது. இந்த தோல்வி தன்னை வெகுவாகப் பாதித்ததாக தெரிவித்த முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கன் (33 வயது), அடுத்து நமீபியாவுடன் நடந்த லீக் ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதைத் தொடர்ந்து, அஸ்கர் ஆப்கனுக்கு பதிலாக ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இருந்த ஆல் ரவுண்டர் ஷராபுதின் அஷ்ரப் (26 வயது), ஆப்கானிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மாற்றத்துக்கு ஐசிசி தொழில்நுட்ப கமிட்டி நேற்று ஒப்புதல் அளித்தது. இடது கை சுழற்பந்துவீச்சாளரான அஷ்ரப், இதுவரை 9 டி20 உள்பட மொத்தம் 26 சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார். இந்திய அணியுடன் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் ஷராபுதின் அஷ்ரப் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: