வங்கதேசத்தை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா

அபுதாபி: வங்கதேச அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் (பிரிவு 1), தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. வங்கதேச அணி தொடக்க வீரர்களாக முகமது நயிம், லிட்டன் தாஸ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 22 ரன் சேர்த்தது. நயிம் 9 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் ஹெண்ட்ரிக்ஸ் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த சவும்ய சர்கார், முஷ்பிகுர் ரகிம் இருவரும் ரபாடா பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினர்.

கேப்டன் மகமதுல்லா (3) ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, அபிப் உசேன் சந்தித்த முதல் பந்திலேயே முட்டை போட்டு மூட்டை கட்டினார். வங்கதேசம் 8.1 ஓவரில் 34 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. ஓரளவு தாக்குப்பிடித்த லிட்டன் தாஸ் 24 ரன் எடுத்து (36 பந்து, 1 பவுண்டரி) ஷம்சி பந்துவீச்சில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தார். ஷமிம் உசேன் 11, டஸ்கின் அகமது 3 ரன்னில் அணிவகுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய மெகதி ஹசன் மிராஸ் 27 ரன் (25 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அன்ரிச் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். நசும் அகமது கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, வங்கதேசம் 18.2 ஓவரிலேயே 84 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷோரிபுல் இஸ்லாம் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜ் தலா 3, ஷம்சி 2, பிரிடோரியஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 85 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. டி காக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் இருவரும் துரத்தலை தொடங்கினர். ரீஸா 4 ரன், டி காக் 16 ரன்னில் வெளியேற, மார்க்ரம் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். தென் ஆப்ரிக்கா 33 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாற, வங்கதேசம் உற்சாகமடைந்தது. எனினும், வாண்டெர் டுஸன் - கேப்டன் தெம்பா பவுமா 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி 47 ரன் சேர்த்தனர். வாண்டெர் டுஸன் 22 ரன் (27 பந்து, 2 பவுண்டரி) எடுத்து நசும் அகமது பந்துவீச்சில் ஷோரிபுல் வசம் பிடிபட்டார். தென் ஆப்ரிக்கா 13.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்து வென்றது. பவுமா 31 ரன் (28 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), மில்லர் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் டஸ்கின் 2, மெகதி ஹசன், நசும் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ரபாடா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories:

More